மரண தண்டனை விதிக்கப்படக்கூடும் என அமெரிக்க அதிபர் மிரட்டல்

ஜனநாயகக் கட்சியினர் சிலர் மீது டிரம்ப் ‘நாட்டு நிந்தனைக் குற்றச்சாட்டு’

2 mins read
84e8ee1a-9ab2-4ca4-ab51-25706616a613
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது நாட்டு நிந்தனைக் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார். சட்டவிரோத உத்தரவுகளைப் புறக்கணிக்கும்படி ராணுவத்தை அவர்கள் கேட்டுக்கொள்ளும் காணொளியை எக்ஸ் தளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து அதிபரின் குற்றச்சாட்டு வந்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: சட்டவிரோத உத்தரவுகளைப் புறக்கணிக்கும்படி ராணுவத்தைக் கேட்கும் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டியிருக்கிறார். துரோகிகள் என்றும் அவர்களின் நடத்தை நாட்டை நிந்திக்கும் விதத்தில் உள்ளது என்றும் திரு டிரம்ப் வியாழக்கிழமை (நவம்பர் 20) சொன்னார்.

“இது மிகவும் மோசமானது. நாட்டுக்கு ஆபத்தானது. அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்கக்கூடாது. நாட்டை நிந்திக்கும் துரோகிகள். அவர்களைச் சிறையில் அடைக்கவேண்டும்,” என்று திரு டிரம்ப், அவரின் ட்ரூத் சோ‌ஷியல் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

பின்னர் இன்னொரு பதிவில், நாட்டை நிந்திக்கும் நடத்தைக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

79 வயது திரு டிரம்ப், அவர்களைத் தூக்கிலிட வேண்டும் என்று இணையவாசி கேட்டுக்கொண்டதை மறுபதிவிட்டார். அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வா‌ஷிங்டனும் அதையேதான் செய்திருப்பார் என்று திரு டிரம்ப் கூறினார்.

ஜனநாயகக் கட்சியின் ஆறு செனட்டர்களும் பிரதிநிதிகளும் நவம்பர் 18ஆம் தேதி வெளியிட்ட காணொளியில் அந்தக் கருத்தை முன்வைத்திருந்தனர். திரு டிரம்ப்பின் மிரட்டலை ஜனநாயகக் கட்சியினர் உடனடியாகச் சாடினர்.

கருத்துப் பதிவிட்ட ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே ராணுவப் பின்னணியைச் சேர்ந்தவர்கள். செனட்டர் மார்க் கெல்லி, செனட்டர் எலிசா ஸ்லோட்கிட் முதலியோரும் அவர்களில் அடங்குவர்.

திரு டிரம்ப்பின் கருத்துகளுக்கு ஜனநாயகக் கட்சி கடுமையான பதிலடி கொடுத்தது.

“ஜனநாயகக் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனத் திரு டிரம்ப் கூறியது, முற்றிலும் வெறுக்கத்தக்கது,” என்று அந்தக் கட்சி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.

அமெரிக்க அதிபர் அவரின் ஆதரவாளர்களிடையே வன்முறையைத் தூண்டிவிடுவதாக ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.

குறிப்புச் சொற்கள்