வாஷிங்டன்: ஈரானியத் தாக்குதல்களால் தங்கள் ராணுலத் தளங்கள் பாதிப்படையக்கூடும் என்பதால் மத்திய கிழக்கில் உள்ள தனது ராணுவ விமானங்கள், கப்பல்கள் சிலவற்றை அமெரிக்கா இடமாற்றம் செய்துள்ளது.
இந்தத் தகவலை அமெரிக்க அதிகாரிகள் இருவர் புதன்கிழமையன்று (ஜூன் 18) ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
தங்கள் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் அதிகாரிகள் இருவரும் இத்தகவலை வெளியிட்டனர்.
அமெரிக்கப் படைகளைப் பாதுகாக்கும் இலக்குடன் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.
படைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை தரப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இடமாற்றம் செய்யப்படும் விமானங்கள், கப்பல்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை தெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே, ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு ஆதரவாக அமெரிக்கா நேரடியாக நடவடிக்கைகள் மேற்கொண்டால் பதிலடி தாக்குதல் கொடுக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.