ஃபிரான்க்ஃபர்ட்: ஜெர்மனியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயணிகள் ரயில் ஒன்று தடம்புரண்டது.
இதில் மூவர் உயிரிழந்தனர். விபத்து காரணமாக பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) நிகழ்ந்ததாக ஜெர்மானியக் காவல்துறை தெரிவித்தது.
சம்பவம் நிகழ்ந்தபோது ரயிலில் ஏறத்தாழ 100 பயணிகள் இருந்ததாக அதிகாரிகள் கூறினர். ஜெர்மனி நேரப்படி மாலை 6.10 மணிக்கு விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
காயமடைந்தோர் நிலை குறித்து காவல்துறை கூடுதல் தகவல் வெளியிடவில்லை.
கனமழை பெய்ததால் கழிவுநீர் சாக்கடை நிரம்பி வழிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதன் விளைவாக ரயில் சென்றுகொண்டிருந்த தண்டவாளத்துக்கு அருகில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் இதுவே ரயில் தடம் புரண்டதற்கான காரணம் என்றும் ஜெர்மானி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, ஜெர்மனியின் ரயில் உள்கட்டமைப்பு மிகப் பழமையானது என்றும் அது இன்னும் புதுப்பிக்கப்படவில்லை என்று அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.
ரயில் சேவைகள் அடிக்கடி தடைபடுவதாகவும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்படுவதாகவும் அண்மைக் காலமாகப் பல புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
அடுத்த சில ஆண்டுகளில் ஜெர்மானிய ரயில் உள்கட்டமைப்பு பல பில்லியன் யூரோ செலவில் புதுப்பிக்கப்படும் என்றும் நவீன வசதிகள் அமைக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசாங்கம் உறுதி அளித்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், ரயில் விபத்தில் மாண்டோர் குடும்பங்களுக்கு ஜெர்மானியப் பிரதமர் ஃபிரேட்ரிக் மெர்ஸ் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

