ஜகார்த்தா: இந்தோனீசியாவின் இரண்டாம் ஆக உயர எரிமலைப் பாறையிலிருந்து தவறிவிழுந்த பிரேசிலிய பெண்ணின் உடலை அதிகாரிகள் மீட்டுள்ளனர். எரிமையில் நடைப்பயிற்சி செய்த அந்தப் பெண் பாறையிலிருந்து தவறி விழுந்து மாண்டார்.
திருவாட்டி ஜுலியான மெரின்ஸ், 27, ஐந்து நண்பர்களுடன் ஜூன் 21ஆம் தேதி ரிஞ்சானி எரிமலையில் நடைப் பயணம் மேற்கொண்டபோது 3,726 மீட்டர் உயரமான பாறையிலிருந்து விழுந்தார்.
அவர் ஜூன் 24ஆம் தேதி மாண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக இந்தோனீசிய மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்புப் பணியாளர்கள் பெண்ணின் உடலை மீட்க முயன்றபோதும் அடர்த்தியான பணியும் செங்குத்தான பாதையும் அதற்குத் தடையாக இருந்தன.
ஆறு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பெண்ணின் உடல் ஜூன் 25ஆம் தேதி மீட்கப்பட்டதாக இந்தோனீசியா தேடல், மீட்பு அமைப்பின் தலைவர் திரு முகமது ஷாஃபீ கூறினார்.
பாறையிலிருந்து எடுக்கப்பட்ட திருவாட்டி மெரின்சின் உடல் பின் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
“ஆரம்பநிலையில் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று நினைத்தோம் ஆனால் மோசமான வானிலையால் அதற்குச் சாத்தியமில்லாமல் போய்விட்டது,” என்றார் திரு ஷாஃபீ
கடும் பணிக்கு இடையே மாண்டவரின் உடலைக் கயிறுகளைக் கொண்டு அதிகாரிகள் தூக்க முயலும் காணொளி சமூக ஊடகங்களில் வலம் வந்தது.
இந்தோனீசிய மீட்பு அமைப்பு திருவாட்டி மெரின்சின் குடும்பத்திடம் மீட்பு நடவடிக்கை குறித்து விவரித்தது. திருவாட்டி மெரின்ஸின் குடும்பமும் நிலைமையை ஏற்றுக்கொண்டனர் என்று திரு ஷாஃபீ பகிர்ந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
மேற்கு நூசா தெங்காரா மாநிலத்தில் அமைந்துள்ள ரிஞ்சானி எரிமை பிரபல சுற்றுலாத் தளமாகவும் இருக்கிறது.
எரிமலையில் ஏற முயன்ற பல சுற்றுப்பயணிகளும் வெளிநாட்டினரும் கடந்த சில ஆண்டுகளாக விபத்துகளில் மாண்டனர்.