பத்து பகாட்: மலேசியாவில் சுற்றுலாப் பேருந்து ஒன்று இரு லாரிகளுடன் மோதியதில் இந்தோனீசியாவைச் சேர்ந்த ஆடவர்கள் இருவர் மாண்டனர்.
மலேசியாவின் பிளஸ் நெடுஞ்சாலையில் தெற்கை நோக்கிய பாதையின் 80வது கிலோமீட்டர் பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 3) அதிகாலை விபத்து நிகழ்ந்தது. மாண்ட இருவரும் பேருந்தில் இருந்தவர்கள்.
இச்சம்பவத்தில் மேலும் 16 பேர் காயமுற்றனர்.
பேருந்தில் 46 பயணிகள் இருந்தனர். அவர்களில் 44 பேர் ஆண்கள், இருவர் பெண்கள்.
சம்பவம் குறித்து வியாழக்கிழமை அதிகாலை 12.44 மணிக்குத் தங்களுக்குத் தகவல் வந்ததாக ஆயர் ஹித்தாம் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுத் தளபதி முகம்மது இசா மஸ்ங்குன் கூறினார் என்று சினார் ஹரியான் செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஆயர் ஹித்தாம், யோங் பெங் தீயணைப்பு நிலையங்கள், அவசர மருத்துவ உதவிச் சேவைப் பிரிவு உள்ளிட்டவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டனர்.
“குழுக்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்தபோது பேருந்தில் பயணம் செய்த 43, 44 வயது ஆடவர்கள் இருவர் சிதைவுகளில் சிக்கியது தெரிந்தது. அவ்விருவரும் உயிரிழந்தது சம்பவ இடத்தில் உறுதிசெய்யப்பட்டது.
“14 ஆண் பயணிகள், பெண் பயணி ஒருவர், பேருந்து ஓட்டுநர் ஆகியோர் காயமடைந்தனர். மற்றவர்களான, 27 ஆண் பயணிகளும் ஒரு பெண் பயணியும், காயமடையவில்லை,” என்று திரு முகம்மது இசா மஸ்ங்குன் வியாழக்கிழமை அறிக்கையில் தெரிவித்தார்.
விபத்தில் சிக்கிய லாரிகளின் ஓட்டுநர்கள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஓட்டுநர்களில் ஒருவருக்கு வயது 42, மற்றொருவருக்கு 33 வயது.
தொடர்புடைய செய்திகள்
மீட்புப் பணிகள் வியாழக்கிழமை அதிகாலை 3.03 மணிக்கு நிறுத்தப்பட்டன.
மாண்டவர்கள் திரு ஹிடிர்மான், 43, திரு ஸுல்ஹாடி, 44, என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.