சிட்னி: பசிபிக் கடலில் சிறு தீவு நாடாக உள்ளது துவாலு. கடல் மட்ட உயர்வால் அந்த நாடு இன்னும் சில காலத்தில் மூழ்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கையை அடுத்து துவாலு நாட்டில் உள்ள 11,000 மக்கள் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்கா சில நாள்களுக்கு முன்னர் துவாலு உள்ளிட்ட 36 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கப்படாது என்று பட்டியலை வெளியிட்டது. இது துவாலு மக்களுக்குப் பெரிய அதிர்ச்சியையும் துன்பத்தையும் கொடுத்துள்ளது.
துவாலுவை பட்டியலில் தவறுதலாக அமெரிக்கா சேர்த்திருக்கலாம் என்றும் அமெரிக்கா எழுத்துமூலம் துவாலு குடிமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று உறுதியளிக்க வேண்டும் என்றும் துவாலு கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது துவாலுவில் உள்ள மூன்றில் ஒருவர் ஆஸ்திரேலியா செல்ல முடிவெடுத்துள்ளனர். காலநிலை மாற்றத்தால் தஞ்சம் கேட்டு மற்ற நாடுகளுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.
இந்நிலையில், அமெரிக்கா துவாலுவை தவறுதலாகப் பட்டியலில் சேர்த்துவிட்டதாகவும் அதைத் திரும்பப்பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.