தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிட்னியில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான பேரணியில் பல்லாயிரம் பேர் பங்கெடுப்பு

2 mins read
338dfae1-a816-4f03-91ea-ee5654e7a8ec
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) பெரிய பாலஸ்தீனக் கொடியொன்றை ஏந்திச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் ஆக அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான சிட்னியில் ஆயிரக்கணக்கானோர் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகப் பேரணி நடத்தியிருக்கின்றனர்.

சிட்னி ஓப்ரா ஹவுசில் ஊர்வலம் நடத்த நீதிமன்றம் இந்த வாரம் தடை விதித்ததைத் தொடர்ந்து அண்மைய பேரணி இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா முழுதும் மெல்பர்ன், சிட்னி உட்பட பல்வேறு நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை 25க்கும் மேற்பட்ட ஊர்வலங்கள் நடைபெற்றுள்ளன. சிட்னிப் பேரணியில் 30,000 பேர் கலந்துகொண்டதாக அதற்கு ஏற்பாடு செய்த பாலஸ்தீன நடவடிக்கைக் குழு கூறியது. காவல்துறையிடம் கூட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்றனர் என்ற விவரம் இல்லை.

அமெரிக்கா முன்னெடுத்துள்ள காஸா அமைதித் திட்டத்தின் முதற்கட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி காஸா வட்டாரத்திலிருந்து இஸ்ரேல், அதன் படைகளை மீட்டுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது.

காஸா போர் ஆரம்பித்து ஈராண்டுக்கும்மேல் ஆகிவிட்டது. அதனை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் 20 அம்ச அமைதித் திட்டத்தை முன்வைத்தார். அதனை இஸ்ரேலும் ஹமாசும் ஏற்றுக்கொண்டன.

சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையிலும் இஸ்ரேல், காஸாவிலும் மேற்குக் கரையிலும் ராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்வதாகச் சிட்னிப் பேரணியின் ஏற்பாட்டாளர் ஒருவர் கூறினார்.

இஸ்ரேலில் வசிக்கும் பாலஸ்தீனர்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பும் முறையாக வகுக்கப்பட்ட பாகுபாட்டு நடவடிக்கைகளும் இன ஒதுக்கீட்டுக் கட்டமைப்பை உருவாக்குவதாக அவர் சொன்னார். ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகம் வெளியிட்ட படங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாலஸ்தீனக் கொடிகளை ஏந்திக்கொண்டு நகரத் தெருக்களில் செல்வதைக் காணமுடிகிறது. எவரும் கைதுசெய்யப்படவில்லை என்று காவல்துறை சொன்னது.

ஆஸ்திரேலியாவில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெறுவது புதிதன்று. பேரணிக்கு ஏற்பாடு செய்தோருக்கு எதிராக ஆஸ்திரேலிய யூத நிர்வாக மன்றம் கண்டனம் தெரிவித்தது. அமைதி உடன்பாடு தோல்வியடைய வேண்டும் என்றும் போர் தொடரவேண்டும் என்றும் அவர்கள் கருதுவதாக மன்றத்தின் இணைத் தலைமை நிர்வாகி பீட்டர் வெர்த்தீம் அறிக்கையொன்றில் கூறினார்.

ஹமாஸ் குழுவினர் 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். பதிலுக்கு இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 67,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். காஸா வட்டாரத்தின் பெரும்பகுதி இஸ்ரேலின் தாக்குதலில் அழிந்துவிட்டது.

குறிப்புச் சொற்கள்