ஜோகூர்: மலேசியாவின் ஜோகூரில் உள்ள சிகாமட்டில் புதன்கிழமை (ஆகஸ்ட் 27) 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து ஜோகூர் மாநிலத்திலும் தெற்கு பாகாங்கிலும் அதிர்வுகள் உணரப்பட்டன.
நான்கு நாள்களில் சிகாமட்டில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் அது.
ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை 9 மணியளவில் சிகாமட் பகுதிக்குத் தெற்கில் 18 கிலோமீட்டர் தூரத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக மலேசிய வானிலை ஆய்வகம் தெரிவித்தது.
ஆய்வகம் தொடர்ந்து நிலைமையைக் கண்காணிப்பதாகவும் குறிப்பிட்டது.
உயிருடற்சேதம், சொத்துச் சேதம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை என்று சிகாமட் வட்டாரப் பேரிடர் நிர்வாகக் குழு சொன்னது.
சிகாமட் வட்டாரத்தில் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதைப் பாதுகாப்பு அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட அமைப்புகளும் ஆய்வு செய்வதாக நிர்வாகக் குழு குறிப்பிட்டது.
இதற்குமுன் ஞாயிற்றுக்கிழமை காலை 6.13 மணியளவில் சிகாமட்டில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே நாளில் குளுவாங்கில் காலை 9 மணிக்கு 2.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.