பேங்காக்: மோசடிச் செயல்கள், இணையக் குற்றங்கள், எல்லை தாண்டிய குற்றக் கும்பல்கள் ஆகியவற்றுக்கு எதிரான முறியடிப்பு நடவடிக்கைகளை தாய்லாந்து தீவிரப்படுத்தி வருகிறது.
இதன் தொடர்பில் தாய்லாந்துப் பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத் திங்கட்கிழமை (ஜூன் 23) உயர்மட்டச் சந்திப்பை நடத்தவுள்ளார்.
அழைப்பு நிலைய (call centres) மோசடிகள், இணையம்வழி இடம்பெறும் ஏமாற்றுச் செயல்கள், சட்டவிரோதச் சூதாட்டம் ஆகிய செயல்களுக்கு எதிராக தேசிய அளவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்துமாறு திருவாட்டி ஷினவாத் உத்தரவிட்டுள்ளார் என்று தாய்லாந்து அரசாங்கப் பேச்சாளர் ஜிராயு ஹூங்சுப் சனிக்கிழமை (ஜூன் 21) தெரிவித்தார். அத்தகைய மோசடிச் செயல்கள் இப்போது தேசியப் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிப்பவையாகப் பார்க்கப்படுகின்றன.
முன்னதாக இம்மாதம் மோசடிக் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை (ஜூன் 19) செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. தாய்லாந்து-கம்போடிய எல்லைகளில் உள்ள குடிநுழைவுச் சாவடிகளைத் திறந்து, மூடுவதில் இம்மாதம் ஏழாம் தேதி அறிவிக்கப்பட்ட மாற்றங்களும் அந்நடவடிக்கைகளில் அடங்கும்.
அதற்குப் பிறகு மோசடி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் கணிசமான அளவு குறைந்திருப்பது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. அதன் காரணமாக குற்றக் கும்பல்களிலிருந்து தாய்லாந்து குடிமக்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது.
அழைப்பு நிலைய மோசடிகள் இடம்பெறும் பகுதிகளைப் பொறுத்தவரை கம்போடியா, மியன்மாரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டதாக ஐக்கிய நாட்டுச் சபை அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஐக்கிய நாட்டுச் சபையின் போதைப்பொருள், குற்றத் தடுப்பு அலுவலகத்தின் கண்டுபிடிப்புகளை வைத்து அந்த அறிக்கை வரையப்பட்டது.
முறியடிப்பு நடவடிக்கைகளின் காரணமாக தாய்லாந்து-மியன்மார் எல்லைகளில் சட்டவிரோதச் செயல்கள் பெருமளவில் குறைந்தது என்பதைக் குறிப்பிட்ட திரு ஜிராயு, தாய்லாந்தின் கிழக்கு எல்லையில் குற்றக் கும்பல்கள் நிலைமைக்கு ஏற்றவாறு அணுகுமுறையை மாற்றிக்கொண்டு செயல்படுவதாக அஞ்சப்படுகிறது என்று குறிப்பிட்டார். அதுபோன்ற குற்றக் கும்பல்களிடம் தாய்லாந்து குடிமக்கள் தெரிந்தே வேலை செய்வது தங்கள் நாட்டினருக்கே தீங்கு விளைவிப்பதாகும் என்று திரு ஜிராயு எச்சரித்தார்.
“தேசியப் பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படுவதையோ தாய்லாந்துக் குடிமக்கள் எமாற்றப்படுவதையோ அரசாங்கம் இனி அனுமதிக்காது,” என்றார் அவர். “இந்த விவகாரம் தேசிய அளவில் முன்னுரிமை வழங்கப்படும் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது,” என்றும் அவர் கூறினார்.