தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒத்திவைப்பு

2 mins read
cefbc91b-dc34-4ebc-a06e-07e732d93057
தற்காலிகப் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள தாய்லாந்துப் பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத். - கோப்புப்படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்தில் தற்காலிகப் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள பெடோங்டார்ன் ஷினவாத்தின் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தாங்கள் ஒத்திவைக்கப்போவதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை திருவாட்டி பெடோங்டார்ன் தற்காலிகப் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஒத்திவைத்தாலும் அரசியல் முட்டுக்கட்டை நிலவுவதைத் தவிர்க்க ஒன்றுபட்டு செயல்படப்போவதாகவும் எதிர்க்கட்சிகள் உறுதியளித்தன.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) திருவாட்டி ‌பெடோங்டார்ன் தற்காலிகமாகப் பதவிநீக்கம் செய்யப்பட்டார். நாணயமற்று நடந்துகொண்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை திருவாட்டி ‌பெடோங்டார்ன் மீது வைத்த 36 செனட்டர்கள் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம் அவரைத் தற்காலிகமாகப் பதவிநீக்கம் செய்யவேண்டும் என தீர்ப்பளித்தது.

இதன் தொடர்பில் ஐந்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு நடத்தினர். ஆளும் கூட்டணியிலிருந்து சென்ற மாதம் விலகிக்கொண்ட பும்ஜாய்தாய் கட்சியும் அவற்றில் அடங்கும். அரசாங்கத்துக்கு நெருக்குதல் அளிக்க ஒன்றாகச் செயல்படப்போவதாக அவை உறுதியளித்தன.

இதற்கிடையே, தாய்லாந்தின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஃபும்தாம் வெச்சாயாச்சாய் அந்நாட்டின் தற்காலிகப் பிரதமராகப் பதவியேற்கிறார். ‘பெரும் வீரர்’ (Big Comrade) என்றழைக்கப்படும் இவரின் அரசியல் பயணம் சுவாரசியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், 71 வயது ஃபும்தாம் தற்காலிகப் பிரதமர் பதவியை வகிப்பது மேலும் விறுவிறுப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.

1970களில் இளையராக இருக்கும்போது திரு ஃபும்தாம், ராணுவம் ஆட்சியைப் பிடிக்க திட்டந்தீட்டியவருக்கு எதிரான மாணவர்ப் போராட்டத்துடன் தொடர்புகொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து ‘ பெரும் வீரர்’ என்ற செல்லப் பெயர் இவருக்கு சூட்டப்பட்டது.

அந்த மாணவர்ப் போராட்டம் கொடூரமான முறையில் நசுக்கப்பட்டது.

தாய்லாந்தின் ராணுவத்துக்கு எதிராகப் போராட கம்யூனிஸ்ட் குழுக்கள் திட்டமிட்டன. கம்யூனிஸ்ட் குழுக்கள் இருந்த காட்டுக்கு திரு ஃபும்தாம் தப்பியோடினார்.

தாம் எந்தத் தரப்புகளுடன் தொடர்பில் இருந்திருக்கக்கூடும் என்பது குறித்து அண்மையில் கேள்வி எழுப்பப்பட்டது.

எனினும், திரு ஃபும்தாம், முன்னாள் தாய்லாந்துப் பிரதமர் தக்சின் ‌ஷினவாத்தின் வர்த்தகத்துக்குள் வெற்றிகரமாக ‘நுழைந்து’ முத்திரை பதித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்