டமாஸ்கஸ்: சிரியாவின் அதிபர் அஹமது அல்ஷாராவின் உயிர்மீது ‘ஐஎஸ்ஐஎஸ்’ (ISIS) எனப்படும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பு, பலமுறை வைத்தக் குறிகளை முறியடித்துவிட்டதாக அந்நாட்டு மூத்த அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் தலைமையில் செயல்படும் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான பன்னாட்டு போராட்டத்தில் சிரிய அதிபர் இணையப் போவதாகவும் அறியப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக ஐஎஸ் அமைப்பு சிரியாவின் அதிபரைக் கொல்ல முயற்சிகள் எடுத்ததாகவும் சிரியாவின் பாதுகாப்புத் துறை அதிகாரியும் மத்தியக் கிழக்கின் விவகாரங்களுக்கு பொறுப்பேற்கும் அதிகாரி ஒருவரும் கூறியுள்ளனர்.
சுமார் 14 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த உள்நாட்டுப் போரால் பெரும் வீழ்ச்சியடைந்துள்ள சிரியாவில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள அதிபர் அஹமது அல்ஷாராவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள நேரடி ஆபத்தை இது வெளிப்படுத்துகிறது.
அதிபர் கலந்துகொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சியொன்றில் ஐஏஸ் தாக்குதல் நடத்தவிருந்தது தடுக்கப்பட்டதாக அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர். விவரங்களை அவர்கள் விளக்கவில்லை என்றாலும் அதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன என்றனர் அரசாங்க அதிகாரிகள்.
பாதுகாப்பு நலனைக் கருதி குறிப்பிடப்பட்ட திட்டங்களை சிரியாவின் தகவல் அமைச்சு வெளியிடவில்லை. இருந்தாலும் ஐஎஸ் அமைப்பினால் சிரியாவுக்கும் வட்டாரத்துக்கும் தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த 10 மாதங்களில் வழிபாட்டுத் தலங்கள் உட்பட பல ஐஏஸ் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாக அமைச்சு விளக்கியது.
“அனைத்து வித தீவிரவாதத்தையும் எதிர்த்து சிரியக் குடிமக்களின் பாதுகாப்பை நிலைநிறுத்துவோம்” என்று சிரியாவின் தகவல் அமைச்சு அதன் கடப்பாட்டை உறுதிப்படுத்தியது.

