தைவான்: நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திரும்பப் பெற வாக்களிப்பு; கூர்ந்து கவனிக்கும் சீனா

2 mins read
4e1da415-05c3-4ec8-864c-8ee624130704
வாக்களிக்க வரிசையில் நிற்கும் தைவானிய மக்கள். - படம்: ஏஎஃப்பி

தைப்பே: தைவான் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 20 விழுக்காட்டினரைத் திரும்பப் பெறுவது குறித்து சனிக்கிழமை (ஜூலை 26) வாக்களிப்பு நடத்தப்படுகிறது.

சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள். தைவான் ஜனநாயகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை என்பதை சீனாவுக்கும் எதிர்த்தரப்பினருக்கும் இந்த வாக்களிப்பு உணர்த்தும் என்று தைவான் நம்புகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக தைவானில் நடத்தப்படும் ஆகப் பெரிய வாக்களிப்பில் இதற்கு முன் இல்லாத அளவில் சீனாவின் தலையீடு இருப்பதாகத் தைவானிய அரசாங்கம் குறைகூறுகிறது.

தைவான் தனது ஒரு பகுதி என்று சீனா கூறி வருகிறது.

இதை தைவான் ஏற்க மறுக்கிறது. தைவான் ஒரு சுதந்திர நாடு என்று அந்நாட்டு அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.

தற்போது நடத்தப்படும் வாக்களிப்பு தைவானிய நாடாளுமன்றத்தை மாற்றி அமைக்கக்கூடும். தைவானை ஆளும் ஜனநாயக முன்னேற்றக் கட்சி பெரும்பான்மை பெறக்கூடும். இதன்மூலம் அதிபர் லாய் சிங் டேயின் அதிகாரம் வலுவடையும் என்று அரசியல் நிபணர்கள் கூறுகின்றனர்.

2024ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் திரு லாய் வெற்றி பெற்றார். ஆனால் பெரும்பான்மை பெற அவரது ஜனநாயக முன்னேற்றக் கட்சி தவறியது.

இதனையடுத்து, அரசாங்கம் எதிர்க்கும் சட்டங்களை அமல்படுத்த எதிர்க்கட்சி தீவிரமாகச் செயல்பட்டு வந்தது. தற்காப்புக்காக ஒதுக்கப்படும் நிதியைக் குறைக்க எதிர்க்கட்சி மும்முரமாகச் செயல்பட்டது.

தைவானைச் சுற்றி சீனா போர்ப் பயிற்சிகளை நடத்தி வரும் நிலையில், தைவானில் இந்த அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதற்கு முடிவு கட்டும் வகையில் தைவானிய அரசாங்கம் இந்த வாக்களிப்பை நடத்துகிறது.

வாக்களிப்பை சீனா மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்