சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பிரபலமான கடற்கரை அருகே, அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட ஒருவரை வெள்ளை சுறாமீன் ஒன்று சனிக்கிழமை (செப்டம்பர் 6) தாக்கியதில் அவர் உயிரிழந்தார். அதையடுத்து, அதிகாரிகள் ஆளில்லா வானூர்திகளையும் ஹெலிகாப்டரையும் கொண்டு கடலைக் கண்காணித்து வருகின்றனர்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தலைநகருக்கு வடக்கே அமைந்துள்ள லாங் ரீஃப் கடற்கரையில், நண்பர்களுடன் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது, கரைக்கு 100 மீட்டர் தொலைவில் சுறா அந்த ஆடவரைத் தாக்கியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் பிரபலமான இரண்டு கடற்கரைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருந்தன.
தாக்குதலுக்குள்ளான அந்த அனுபவமிக்க அலைச்சறுக்கு வீரர், மற்ற அலைச்சறுக்கு வீரர்களால் நீரிலிருந்து வெளியே இழுக்கப்பட்டார். இருப்பினும், அதிக ரத்தப்போக்கு காரணமாக சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
2022 பிப்ரவரியில், நீச்சல் வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, சிட்னியில் சுறா தாக்கி ஒருவர் உயிரிழந்திருப்பது இதுவே முதல்முறை.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் முக்கிய நீர் மீட்பு அமைப்பான ‘சர்ஃப் லைஃப் சேவிங் நியூ சவுத் வேல்ஸ்’, சுறா உள்ளதா என்பதைக் கண்காணிக்க ஆளில்லா வானூர்திகளையும் ஹெலிகாப்டரையும் அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பயன்படுத்தியதாக நியூ சவுத் வேல்ஸ் முதன்மைத் தொழில்துறைகள், வட்டார மேம்பாட்டுத் துறை தெரிவித்தது.

