ஹனோய்: வாடகைத் தாய் கும்பல் ஒன்றை வியட்னாமியக் காவல்துறை முறியடித்துள்ளது. வியட்னாமின் பல மாநிலங்களில் மேள்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகளில் 11 குழந்தைகள் மீட்கப்பட்டன. பிறந்து ஒன்பதே நாள்களான குழந்தையிலிருந்து மூன்று மாதக் குழந்தைகள் வரை மீட்கப்பட்டன.
வாடகைத் தாய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் பலர் கைது செய்யப்பட்டனர்.அக்கும்பலுக்குச் சீன நாட்டவர் ஒருவர் தலைவராக இருந்ததாகவும் அவரது பெயர் வாங் என்றும் அதிகாரிகள் கூறினர்.
சமூக ஊடகம், பாதுகாப்புமிக்க தொடர்புமுறை, போலி அடையாளங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அக்கும்பல் செயல்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மற்ற நாடுகளுடன் தொடர்புடைய வாடகைத் தாய் விளம்பரத்தை சமூக ஊடகத்தில் வியட்னாமிய அதிகாரிகள் கண்டதை அடுத்து, கும்பலின் செயல்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.
எளிதில் பாதிப்படையக்கூடிய வியட்னாமிய பெண்களை வாடகைத் தாயாகக் கும்பல் பயன்படுத்தியது என்று புலனாய்வாளர்கள் கூறினர். செயற்கைக் கருத்தரிப்புக்காக அப்பெண்களில் சிலர் சீனாவுக்கு அல்லது கம்போடியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு அவர்கள் வியட்னாம் திரும்பினர்.
35 வயதுக்கும் குறைவான ஆரோக்கியமான பெண்களைத் தேடி கண்டுபிடிக்கும் பொறுப்பை துவோங் எனும் பொறுப்புக்குக் கும்பல் தந்ததாகக் கூறப்படுகிறது.
குழந்தைகள் பிறந்ததும் அவற்றைப் பார்த்துக்கொள்ளும் பராமரிப்பாளர்களுக்கு துவோங் ஏற்பாடு செய்தார். அதுமட்டுமல்லாது, குழந்தைப் பிறப்புப் பதிவு, மரபணுச் சோதனைகள், தந்தையர் சான்றிதழ், பயண ஆவணஙகள் ஆகியவற்றுக்கும் அவர் ஏற்பாடு செய்ததாக நம்பப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
துவோங், முன்பு வாடகைத் தாயாக இருந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.
வாடகைத் தாய்மார்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் குழந்தை பிறப்புக்குப் பிறகு அங்கிருந்து திரும்புவதையும் அவர் பார்த்துக்கொண்டார்.
அவருக்கு மாதச் சம்பளமாக 1,000 அமெரிக்க டாலர் (S$1,300) வழங்கப்பட்டது.
வாடகைத் தாய் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு குழந்தை பிறப்புக்கும் ஏறத்தாழ 300 மில்லியன் டோங்குக்கு (S$14,700) தரப்பட்டது.
அதிகாரிகளிடம் பிடிபடாமல் இருக்க கும்பலைச் சேர்ந்தவர்கள் சொகுசு அடுக்குமாடி வீடுகளில் தங்கினர். அத்துடன், அவர்கள் அடிக்கடி வீடு மாறினர்.
வாடகைத் தாய் பெற்றெடுத்த குழந்தை ஒன்றை எடுத்துச் செல்ல வியட்னாமுக்குள் நுழைந்த மூன்று சீன நாட்டவர்களையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட குழந்தைகள் தற்போது வியட்னாமியப் பெண்கள் மாதர் சங்கத்தின் பெண்கள் மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் பராமரிப்பின்கீழ் உள்ளன.
குழந்தைகள் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய வியட்னாமிய சுகாதாரத்துறை அமைச்சு மற்றும் வியட்னாமிய சிறார் பாதுகாப்பு நிதியத்துடன் அதிகாரிகள் இணைந்து செயல்படுகின்றனர்.
வாடகைத் தாய் கும்பல் தொடர்பான விசாரணை தொடர்கிறது.

