கோலாலம்பூர்: மலேசியாவில் மரண தண்டனை விதிக்கப்படுவதை நீக்குவதற்கான பரிந்துரை தீவிரமாக ஆராயப்படவுள்ளது.
மரண தண்டனையை நீக்குவது குறித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தீவிரமாக ஆய்வு நடத்தப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் அலுவலக துணை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை தொடர்பில் கொள்கை, வழிகாட்டுதல் மறுபரிசீலனை செயற்குழு அமைக்கும் நடவடிக்கையைத் தமது அரசாங்கம் எடுத்து வருவதாக அவர் கூறினார். அந்தச் செயற்குழு, மலேசிய சட்ட சீர்திருத்தக் குழுவுடன் (சிஎல்ஆர்சி) இணைந்து செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இந்த ஆய்வு 2026ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு மாதங்களுக்கு ஆய்வை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது,” என்று புக்கிட் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் வியாழக்கிழமை (நவம்பர் 13) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் திரு குலசேகரன் கூறினார்.
“ஆய்வு மேலும் முழுமையடையவேண்டும் என்று அரசாங்கம் கருதினால் அது நடத்தப்படும் காலம் நீட்டிக்கப்படலாம்,” என்றும் அவர் விளக்கினார்.
வருங்காலத்தில் கொலை வழக்குகளைத் தவிர மற்ற வழக்குகளுக்கு மரண தண்டனை விதிப்பதை நிறுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்ற கேள்வியை திரு சிங் முன்வைத்தார். அதற்கான ஆய்வுகள் நடத்தப்படுமா என்றும் அவர் கேட்டார்.
நீதித் துறையில் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரும் செயற்குழுவில் இடம்பெறுவர் என்று திரு குலசேகரன் விவரித்தார். அரசாங்கம், சட்ட அமைப்புகள், குற்றவியல் சட்ட வல்லுநர்கள், அரசாங்க சார்பற்ற அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் அவர்களில் அடங்குவர் என்று அவர் விளக்கமளித்தார்.
“சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரின் கருத்துகளையும் விவாதங்களையும் கேட்ட பிறகு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டுள்ள அணுகுமுறையின் வாயிலாக தெளிவாக நியாயப்படுத்தக்கூடிய விதத்தில் அரசாங்கம் மரண தண்டனை குறித்து முடிவெடுப்பதை உறுதிசெய்வதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகும்,” என்று திரு குலசேகரன் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மலேசிய சிறைச்சாலை புள்ளிவிவரங்கள் அடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) நிலவரப்படி மொத்தம் 97 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

