டெஹ்ரான்: இஸ்ரேலுக்கு எதிரான போரில் உயிரிழந்த கிட்டத்தட்ட 60 ராணுவ வீரர்களுக்கு ஈரான், அரசாங்க ஈமச்சடங்கை ஜூன் 28ஆம் தேதி நடத்தியது.
இஸ்ரேலின் தாக்குதலில் மாண்ட அணுவாயுத விஞ்ஞானிகளுக்கும் ராணுவத் தளபதிகளுக்கும் சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 12.30 மணியளவில் ஈமச்சடங்கு தொடங்கியது.
“தியாகிகளைக் கௌரவிப்பதற்கான சடங்கு அதிகாரபூர்வமாகத் தொடங்கிவிட்டது,” என்று அரசாங்கத் தொலைக்காட்சி குறிப்பிட்டது. கறுப்பு உடை அணிந்த மக்கள் ஈரானிய கொடிகளை அசைத்தவாறு உயிரிழந்த ராணுவத் தளபதிகளின் புகைப்படங்களைக் கையில் ஏந்தினர்.
மத்திய டெஹ்ரானில் உள்ள எங்கலாப் சதுக்கத்தில் ஈரானிய கொடிகள் சுற்றப்பட்ட சவப்பெட்டிகளில் மாண்ட தளபதிகளின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
நட்பு நாடான இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரானில் உள்ள மூன்று அணுவாயுதத் தளங்கள்மீது அமெரிக்கா கடந்த வார இறுதியில் தாக்குதல்களை நடத்தியது.
சண்டைநிறுத்தத்தில் முடிந்த போரில் வெற்றிகண்டதாக இஸ்ரேலும் ஈரானும் மாறி மாறி கூறுகின்றன. அமெரிக்காவின் தாக்குதலால் பெரியளவில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஈரானியத் தலைவர் கமனெய் குறிப்பிட்டார்.
போரில் வென்றதாக ஈரான் கூறுவதை திரு டிரம்ப் தமது ட்ருத் சோஷியல் தளத்தில் ஜூன் 27ஆம் தேதி சாடினார்.
திரு கமெனெய் எங்கு மறைந்திருந்தார் என்பது தமக்குத் துல்லியமாகத் தெரிந்திருந்தும் இஸ்ரேலோ அமெரிக்க ராணுவமோ அவரைக் கொல்லாமல் பாதுகாத்ததாகவும் திரு டிரம்ப் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
ஈரானுக்கு எதிரான தடைகளை நீக்குவதற்கான சாத்தியம் பற்றியும் அண்மை நாள்களில் திரு டிரம்ப் ஆராய்ந்துவருவதாகக் குறிப்பிட்டார்.
அப்படியிருந்தும் தமக்கு எதிராகக் கோபம், வெறுப்பு, அருவெறுப்பு நிறைந்த கருத்துதான் வெளிப்படுகிறது என்றார் அவர்.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி, திரு கமெனெய் பற்றி திரு டிரம்ப் கூறிய கருத்தைச் சாடினார்.
“அதிபர் டிரம்ப்புக்கு உண்மையாகவே உடன்பாட்டை எட்ட விருப்பம் இருந்தால் ஈரான் தலைவருக்கு எதிரான மரியாதைக்குறைவான ஏற்க முடியாத பேச்சை அவர் கைவிடவேண்டும்,” என்று தமது எக்ஸ் தளத்தில் திரு அராக்சி சொன்னார்.