லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர், அவரின் தலைமைத்துவத்திற்குத் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து வரும் எத்தகைய சவாலையும் துணிவுடன் எதிர்கொள்வார் என்று நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
திரு ஸ்டார்மரின் பதவிக்கு உடனடி அச்சுறுத்தல் நிலவுவதாக அவருக்கு விசுவாசமாக இருப்போர் கருதுகின்றனர். இன்னும் சுமார் இரண்டு வாரத்தில், வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அத்தகைய நெருக்குதல் ஏற்படக்கூடும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
டௌனிங் ஸ்திரீட், முழுமையான தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். அரசாங்கம் தற்போது சந்திக்கும் சிக்கலிலிருந்து மீண்டுவர அது எந்த விதத்திலும் உதவாது என்று அவர்கள் கூறினர்.
திரு ஸ்டார்மரின் நண்பர்கள் மிகவும் கவலையோடு இருக்கின்றனர். அவரைப் பதவியிலிருந்து அகற்றி வேறொருவரை நியமிக்கச் சதித்திட்டம் தீட்டப்படுவதாக அவர்கள் நினைக்கின்றனர்.
பிரதமருக்கு மிகவும் நெருக்கமாக இருப்போரின் பெயர்களைத் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்ததாகக் கூறப்பட்டது. சுகாதார அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங், உள்துறை அமைச்சர் ஷாபனா மஹ்மூட் முதலியோர் அவர்களில் சிலர்.
எரிசக்தி அமைச்சர் எட் மிலிபேண்ட், முன்னாள் போக்குவரத்து அமைச்சர் லூயிஸ் ஹை ஆகியோருக்கும் விருப்பம் இருப்பதாக வதந்திகள் உலவுகின்றன.
“இதனை எதிர்த்து அவர் துணிவுடன் போராடுவார்,” என்று அமைச்சர் ஒருவர் சொன்னார்.
“தொழிற்கட்சிக்குப் பொதுத் தேர்தலில் வெற்றியைப் பெற்றுத்தந்தோரில் உயிரோடு இருக்கும் இருவரில் ஒருவர் திரு ஸ்டார்மர். 17 மாதத்திற்குப் பிறகு அவருக்கு எதிராகப் போட்டியிடுவது விவேகமற்றது,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
அடுத்த ஆண்டு (2026) மே மாதத்தில் இங்கிலாந்தின் பல பகுதிகளில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களில் திரு ஸ்டார்மரின் தொழிற்கட்சி தோல்விகளைச் சந்திக்கும் என்று கூறப்படுகிறது.
மக்களிடையே திரு ஸ்டார்மருக்கான ஆதரவு குறைவாக இருப்பதும் கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

