ஆசியான் கூட்டமைப்பின் ஒருங்கிணைந்த பொருளாதார திட்டத்தை ஜப்பான் ஆதரிப்பதாக மலேசியாவுக்கான ஜப்பானியத் தூதர் நொரியுகி ஷிகாத்தா தெரிவித்துள்ளார்.
பத்து தென்கிழக்காசிய நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் அமைப்பின் 47ஆம் உச்சநிலை மாநாடு, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அக்டோபர் 26 முதல் 28 வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் நாடுகளின் முக்கியப் பிரதிநிதிகள் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு முன்னதாக நடந்த ஒரு நேர்காணலில் ஜப்பானியத் தூதர் அவரது கருத்துகளை வெளியிட்டார் என்று சனிக்கிழமை (அக்டோபர் 25) மலாய் மெய்ல் என்ற மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தோ பசிபிக் வட்டாரத்தில் தடைகளற்ற வர்த்தகத்தை உறுதிசெய்ய ஆசியான் கூட்டமைப்பால் உருவாக்கப்பட்டுள்ள இரண்டு திட்டங்களை அவர் முக்கிய தூண்களாகக் குறிப்பிட்டு பேசினார்.
உலகின் ஆகப் பெரிய வர்த்தக கூட்டமைப்பான ஒட்டுமொத்த வட்டார பொருளியல் பங்காளித்துவம் (Regional Comprehensive Economic Partnership - RCEP) மற்றும் 12 நாடுகளை உள்ளடக்கிய ஒட்டுமொத்த, முற்போக்கு பசிபிக் வட்டார பங்காளித்துவ ஒப்பந்தம் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership - CPTPP) ஆகியவை அந்த இரு திட்டங்கள் ஆகும்.
அந்த இரு திட்டங்களும் வட்டாரத்தில் சட்ட திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட விநியோகச் சங்கிலித் தொடரை உறுதி செய்வதில் முக்கிய அங்கம் வகிப்பவை என்று அவர் விளக்கினார்.
மலேசியாவுடன் தொடர்ந்து நெருக்கமாக உழைத்து, வட்டார பொருளாதார ஒருங்கிணைப்பை ஏற்படுத்த தோக்கியோ விழைவதாக திரு நொரியுகி தெரிவித்தார்.
“புத்தாக்கமான ஒருங்கிணைந்த வட்டார பொருளாதாரத்தை நோக்கி மலேசியாவின் தலைமையில் நாங்கள் ஒரே திசையில் முன்னேறுகிறோம்” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த அக்டோபர் 21 அன்று பதிவியேற்றுள்ள ஜப்பானின் புதிய பிரதமர் சனே தகாய்ச்சி ஆசியான் மாநாட்டில் கலந்துகொள்ள கோலாலம்பூர் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் மலேசியாவின் பிரதமரும் ஆசியான் கூட்டமைப்பின் தலைவருமான அன்வார் இப்ராகிம்முடன் இருநாட்டு சந்திப்புக் கூட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அறியப்படுகிறது .

