குடும்ப ஒன்றுகூடல்களை நடத்துமாறு வடகொரியாவுக்கு தென்கொரியா கோரிக்கை

1 mins read
d5f236f5-7553-4d6b-8323-9350e990c2ad
2015ஆம் ஆண்டில் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தென்கொரியர்கள். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: கொரியப் போரால் பிரிந்த குடும்பத்தாருக்கான ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளை மீண்டும் நடத்துவது குறித்து ஆலோசிக்குமாறு தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) வடகொரியாவைக் கேட்டுக்கோண்டுள்ளார்.

1950லிருந்து 1953ஆம் ஆண்டு வரை நீடித்த கொரியப் போரில் பல குடும்பங்கள் பிரிந்தன. அதனால் ஒரே குடும்பத்தில் இருப்போரில் சிலர் தென்கொரியாவிலும் மற்ற சிலர் வடகொரியாவிலும் இருக்கக்கூடும்.

எதிர்வரும் நன்றி தெரிவிப்பு விடுமுறையை (thanksgiving holidays) முன்னிட்டு சந்திப்பு ஒன்றில் பேசிய திரு லீ, இரு கொரியாக்களுக்கும் இடையிலான வன்மம் தளரும் என்றும் இருதரப்புக்கிடையேயும் ஒத்துழைப்பு மீண்டும் தொடங்கும் என்று தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் வடகொரியாவில் குடும்பத்தார் இருக்கும் தென்கொரியர்களிடம் சொன்னார்.

மனிதாபிமான அடிப்படையில், பாதிக்கப்பட்ட மக்கள் பிரிந்த குடும்பத்தாரைத் தொடர்புகொண்டு கடிதங்கள் பரிமாறிக்கொள்ள வகைசெய்வது இரு கொரியாக்களின் பொறுப்பு என்று திரு லீ, வட கொரிய எல்லையில் உள்ள தீவுக்குப் பயணம் மேற்கொண்டபோது கூறினார்.

பாதிக்கப்பட்ட சுமார் 36,000 தென்கொரியர்கள், வடகொரியாவில் உள்ள தங்கள் குடும்பத்தாரைச் சந்திக்க ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர் என்று தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடைசியாக 2018ல் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடந்தது. அதற்குப் பிறகு இருநாட்டு உறவு மோசமடைந்ததைத் தொடர்ந்து ஒன்றுகூடல் இடம்பெறவில்லை.

குறிப்புச் சொற்கள்