கொடிய புயல் பெரும் சூறாவளியாகும் ஆபத்து: பிலிப்பீன்ஸ் எச்சரிக்கை

2 mins read
34662020-9f5c-4e67-b8c1-97c57ce0cb76
‘ஃபுங்-வொங்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் பிலிப்பீன்சின் கடலின்மேல் நவம்பர் 7ஆம் தேதி சூறாவளியாக உருமாறிவரும் செயற்கைக்கோள் புகைப்படம். - படம்: ராய்ட்டர்ஸ் (CSU/CIRA & JMA/JAXA/Handout)

மணிலா: பிலிப்பீன்சின் வானிலை ஆய்வகம், ‘ஃபுங்-வொங்’ எனப்பெயரிடப்பட்ட கொடும் புயல், அந்நாட்டு கடல்பகுதிகளில் பெரும் சூறாவளியாக உருமாறி வருவதாக எச்சரித்துள்ளது.

மக்கள் பலர் மடியக்கூடும் என்று அஞ்சப்படும் அந்தச் சூறாவளி, ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) கரைகடந்து பிலிப்பீன்ஸை தாக்கும் என்று ஆய்வகம் தெரிவித்துள்ளது. நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் பயங்கரமான காற்று வீசுவதுடன் ஐந்து மீட்டர் அளவுக்கு மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வகம் விவரித்துள்ளது.

சூறாவளியின் சுற்றளவு 1,500 கிலோமீட்டர் தூரம் என்று அறியப்படுகிறது. அது முழு நாட்டையே சுற்றிவளைக்கும் அளவுக்கு மிகப்பெரியது என்று ‘பகாஸா’ என்ற அமைப்பின் வானிலை ஆய்வாளர் பெனிசன் எஸ்டரெஜா செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

பகாஸா என்பது பிலிப்பீன்சின் வளிமண்டல, புவி இயற்பியல் மற்றும் வானியல் சேவைகள் நிர்வாகமாகும்.

“ஏற்கெனவே பிலிப்பீன்ஸின் கிழக்கு வட்டாரங்களில் பெருமழையும் காற்றும் தொடர்ந்து தாக்கிவருகின்றன. உள்ளூரில் ‘உவான்’ என்று அழைக்கப்படும் இந்த ‘ஃபுங்-வொங்’ சூறாவளி, மணிக்கு 140 முதல் 185 கிலோ மீட்டர் வேகக் காற்றுடன் கரையைக் கடக்கவுள்ளது. அது வீடுகள், மரங்கள், கட்டடங்கள் என பலவற்றைத் தாக்கி அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்தது” என்று திரு எஸ்டரெஜா தெளிவுபடுத்தினார்.

பிலிப்பீன்ஸின் வடக்கு மற்றும் மத்திய லுசோன் பகுதியிலும் கிழக்கு மாவட்டங்களிலும் 200 மில்லிமீட்டர் வரை மழை கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிகோல், சமர் வட்டாரங்களில் பெருவெள்ளத்துடன் நிலச்சரிவும் ஏற்படும் அபாயம் உள்ளது.

தாழ்வான கரையோரப் பகுதிவாழ் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மீன்பிடித்தல் போன்ற கரையோர வர்த்தகங்கள் உடனே நிறுத்தப்படவேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் ஆட்சியாளர்கள் பள்ளிகளை திங்கட்கிழமை (நவம்பர் 10) தற்காலிகமாக மூடியுள்ளனர். பிலிப்பீன்ஸின் தேசிய விமானங்கள் சில சேவைகளை நிறுத்தியுள்ளன.

சில நாள்களுக்கு முன்புதான் கல்மெய்கி புயல், வட்டாரத்தையே அழித்து, பிலிப்பீன்ஸில் 204 பேரையும் தாய்லாந்தில் ஐவரையும் பலிவாங்கியது.

குறிப்புச் சொற்கள்