புக்கெட்டில் கடும் வெள்ளம்

1 mins read
77072a2d-c266-42ca-afa9-50bd4e22c41b
இரவு முழுவதும் பெய்த கனமழையால் புக்கெட்டில் பாதிப்பு. - படம்: தி நே‌ஷன் / ஏ‌ஷியா நியூஸ் நெட்வோர்க்

பேங்காக்: தாய்லாந்தின் புக்கெட் மாநிலத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் அங்கு பல பகுதிகளில் புதன்கிழமை (அக்டோபர் 22) காலை கடும் வெள்ளம் ஏற்பட்டது.

பல்வேறு இடங்களில் நீர் தேங்கிப்போனதாக கமலா வட்டாரப் பகுதி நிர்வாகப் பிரிவு உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை ஏழு மணிக்குத் தெரிவித்தது.

எனினும், எல்லா முக்கியச் சாலைகளும் போக்குவரத்துக்கு உகந்த நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சொய் ஃபான்டெசியா, சொய் ஒலால்லா, குலோங் மூ உள்ளிட்ட பகுதிகளில் அணுக்கமாகக் கண்காணிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

ஓரிடத்தில் கார் ஒன்று பேரங்காடிக்கு அருகே விபத்துக்கு உள்ளானதாக அதிகாரிகள் கூறினர். அந்த கார் மின் கம்பத்தின்மீது மோதியது. அந்த மின்கம்பம் கார் மீது கவிழ்ந்தது. அச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

மற்றொரு சம்பவத்தில் கமலா பொழப் பூங்காவில் மரத்தின் கிளை, ஒரு சுற்றுப்பயணியின் கார் மீது விழுந்தது. காரின் முன் கண்ணாடி நொறுங்கியது.

முக்கியப் பகுதிகளில் வடிகால்களைச் சீரமைக்கும் பணிகளில் கமலா பகுதி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்