பியோங்யாங்: வடகொரியாவின் மூத்த தலைவர் கிம் யோங் நாம் காலமானதாக அந்நாட்டின் அரசாங்க ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்திருக்கிறது.
அவருக்கு வயது 97.
திரு கிம் யோங் நாம் திங்கட்கிழமை (நவம்பர் 3) காலமான தகவலை அரசாங்க ஊடகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. நாட்டின் சடங்குபூர்வத் தலைவராக அவர் பொறுப்பு வகித்திருக்கிறார். 1998ஆம் ஆண்டு பொறுப்புக்கு வந்த அவர், 2019ல் பதவி விலகினார்.
வடகொரியாவின் உச்ச மக்கள் மன்ற நிர்வாகக் குழுவின் முன்னாள் தலைவராக இருந்துள்ளார் திரு கிம் யோங் நாம். நாட்டின் தலைவர்கள் மூவருடனும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு என்று தெரிவிக்கப்பட்டது.
திரு கிம் யோங் நாமின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்த வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் நேரில் சென்றிருந்ததாக அரசாங்க ஊடகம் குறிப்பிட்டது.
திரு கிம் யோங் நாம் வடகொரியாவுக்கு ஆற்றிய பங்கு பெரும்பாலும் சடங்குபூர்வமானது என்றாலும் வடகொரியாவின் அரசதந்திரிகளிடமும் வெளியுறவுத் துறையினரிடமும் அவருக்கு அதிக செல்வாக்கு இருந்ததாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
வடகொரியா, காலஞ்சென்ற திரு கிம் யோங் நாமுக்கு அரசாங்க மரியாதையுடன்கூடிய இறுதிச்சடங்கை நடத்தும் என்று கேசிஎன்ஏ தெரிவித்தது.

