கோலாலம்பூர்: மலேசியாவில் மேற்கொள்ளப்படும் ஏராளமான விழிப்புணர்வு இயக்கங்களுக்கும் அமலாக்க நடவடிக்கைகளுக்கும் இடையே இணைய மோசடிகளின் எண்ணிக்கை குறையவில்லை என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் சைஃபுதின் நசுத்தியோன் கூறியுள்ளார்.
நாட்டில் நிலவும் இணைய மோசடிகளில் வேலை, பொட்டல விநியோகம், காதல் தொடர்பானவையே ஆக அதிகமாக இடம்பெறுவதாய் திரு சைஃபுதின் குறிப்பிட்டார்.
காவல்துறை, மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம், மலேசியா வங்கி, தனியார் துறைகள் என பல அமைப்புகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியபோதும் இணைய மோசடிகள் குறிப்பிடத்தக்க அளவு குறையவில்லை என்றார் அவர்.
அதற்கு மாறிவரும் மோசடிக் கும்பல்களின் உத்திகள், மின்னிலக்கப் பயன்பாடு குறித்து குறைவான அறிவு, மின்னிலக்கத் தளங்களைத் தாரளமாகப் பயன்படுத்தும் போக்கு, எல்லைத் தாண்டிய அமலாக்க நடவடிக்கைகளில் உள்ள சவால்கள் ஆகியவை காரணங்கள் என்று திரு சைஃபுதின் சுட்டினார்.
மோசடிக்காரர்கள் பெரும்பாலும் போலி அடையாளங்களைப் பயன்படுத்தி உண்மையான இணையப்பக்கங்களைப் போல போலி பக்கங்களை உருவாக்கி மோசடியில் ஈடுபடுவதாகக் கூறிய திரு சைஃபுதின், பெரியோருக்கும் சிறியோருக்கும் அத்தகைய போலி இணையப்பக்கங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லை என்றார்.
மேலும், வெளிநாடுகளிலிருந்து செயல்படும் மோசடிக் கும்பல்களை அடையாளம் காண்பதில் சிரமம் நிலவுவதால் விசாரணைகளை மேற்கொள்ள முடியவில்லை என்றார் அவர்.
கடந்த ஆண்டு மட்டும் மலேசியக் காவல்துறை நாடளவில் 10,400க்கும் அதிகமான மோசடித் தடுப்பு நடவடிக்கைகளை நடத்தியது. கண்காட்சிகள், சமூக கலந்துரையாடல்கள், அதிகாரிகளைச் சந்தித்துப் பேசும் நிகழ்ச்சிகள், ஊடகங்களைச் சந்தித்தல் என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
எல்லைத் தாண்டிய இணையமோசடி குறித்து ஆசியானிலும் அனைத்துலக அளவிலும் நடத்தப்படும் கலந்துரையாடல்களில் மலேசியா தொடர்ந்து பங்கேற்பது மிகவும் முக்கியம் என்று திரு சைஃபுதின் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அதேவேளை, இவ்வாண்டு ஜனவரியில் தொடங்கப்பட்ட பாதுகாப்பான இணையம் குறித்த இயக்கம், 559 பள்ளிகளையும் உயர்கல்வி நிலையங்களையும் சென்றடைந்ததைக் குறிப்பிட்ட அவர், 60,000க்கும் அதிகமான மாணவர்கள் அதில் கலந்துகொண்டதைச் சுட்டினார்.

