மியன்மாரில் தொடர்ந்து அதிகரிக்கும் மோசடி நிலையங்கள்

1 mins read
885c50ea-d790-404d-973b-8b90b66da3ec
மியன்மாரில் உள்ள மோசடி நிலையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை செய்கின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

பாரிஸ்: மியன்மாரில் உள்ள சில மோசடி நிலையங்கள் உலக அளவில் இணைய மோசடிகளை நடத்துகின்றன. இதனால் பல பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை ஒடுக்க மியன்மாரில் அமலாக்க நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டன. இந்நிலையில் அந்நாட்டில் மீண்டும் மோசடி நிலையங்கள் வேகமாக விரிவடைந்து வருகின்றன.

இதுகுறித்த தகவலை ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின் புலனாய்வுப் பிரிவுச் செய்தியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

தாய்லாந்து-மியன்மார் எல்லையில் உள்ள மியாவாடி பகுதியில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றைச் சுற்றி கடுமையான காவல் உள்ளது.

அதுதொடர்பான படங்களைச் செயற்கைக்கோள் மற்றும் ஆளில்லா வானூர்திகள் மூலம் செய்தியாளர்கள் திரட்டியுள்ளனர்.

இணையச் சேவைக்கு எலான் மஸ்க்கின் ‘ஸ்டார்லிங்க்’ சேவையை மோசடி நிலையங்கள் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையின்போது பெரும்பாலான மோசடி நிலையங்களில் ‘ஸ்டார்லிங்க்’ தொடர்பான சேவைகள் இல்லை.

ஆனால் ஜூலை முதல் அக்டோபர் மாதக் காலத்தில் மியன்மாரில் ‘ஸ்டார்லிங்க்’ சேவை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது.

இதையடுத்து அமெரிக்கா ‘ஸ்டார்லிங்க்’ மீது விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளது.

சீனா, தாய்லாந்து, மியன்மார் ஆகியவை கொடுத்த அழுத்தத்தால் கடந்த பிப்ரவரி மாதம் மியன்மார் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த மோசடி நிலையங்கள் துடைத்தொழிக்கப்பட்டன.

அந்நிலையங்களில் கிட்டத்தட்ட 7,000 பேர் வேலை செய்தனர். அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சீனக் குடிமக்கள்.

குறிப்புச் சொற்கள்