வெலிங்டன்: விண்வெளியில் செயற்கைக்கோள்களைச் செலுத்தும் திட்டத்தை நியூசிலாந்து அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
பெரிய அளவில் விண்வெளியில் செயல்படும் விரிவான திட்டங்கள் ஆராயப்படுவதாக பசிபிக் வட்டாரத்தில் உள்ள நியூசிலாந்தின் விண்வெளி அமைச்சர் ஜுடித் கொலினஸ் புதன்கிழமை (நவம்பர் 5) ஏஎஃப்பி செய்தி ஊடகத்திடம் தெரிவித்தார்.
ஒன்றுக்கும் மேற்பட்ட அரசாங்கத்தின் செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தி தேசிய நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவது நியூசிலாந்தின் முக்கியக் குறிக்கோளாகும். இதுதொடர்பாகப் பல ஆண்டுகள் நியூசிலாந்து திட்டமிடுகிறது.
அதன்படி, சட்டவிரோதமாக மீன்பிடித்தல், இயற்கைப் பேரிடர்களின்போது மனிதநேய உதவிகளை ஏற்படுத்துவது போன்றவற்றைக் கண்காணிக்க விண்வெளித் திட்டம் பெரிதும் உதவும்.
அதேசமயம், மற்ற நாடுகளிடம் இவைபோன்ற உதவிகளை நியூசிலாந்து நாடுவதும் தவிர்க்கப்படும் என்று அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் விளக்கினார்.
நாட்டின் அறிவியல் துறைக்கும் வர்த்தகத்துக்கும் விண்வெளித்துறை தனிப்பெரும் வாய்ப்பளிக்கும் என்று அறியப்படுகிறது.
புதிய ஆய்வுகளும் செயற்கைக்கோள் பாகங்கள் தயாரிப்பும் இதன்வழி மேம்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வருங்காலத்தில் மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்களையும் விண்வெளிக்கு அனுப்பிவைக்கும் சேவைகளையும் இதன்வழி செயல்படுத்த நியூசிலாந்து விழைகிறது.
தொடர்புடைய செய்திகள்
மேலும் ‘ராக்கெட் லேப்’ என்ற விண்வெளிச் சேவை நிறுவனம் நியூசிலாந்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள ‘மகியா பெனின்சுலா’ தளத்தில் இருந்து 2017ஆம் ஆண்டுமுதல் பல செயற்கைக்கோள்களைப் பாய்ச்சியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

