புட்டின் ஏமாற்றிவிட்டார்: டிரம்ப்

2 mins read
f56ba4d4-3bb2-4d52-b092-0b2c14e9db6f
பிரிட்டி‌ஷ் பிரதமர்களின் புறநகர் இல்லமான செக்கர்சில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பும் பிரிட்டி‌ஷ் பிரதமர் கியர் ஸ்டார்மரும் ‌செய்தியாளர்களைச் சந்தித்தனர். - படம்: இபிஏ

லண்டன்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தம்மை வருத்தத்தில் ஆழ்த்திவிட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சாடியுள்ளார்.

பிரிட்டனுக்கு அதிகாரபூர்வப் பயணமாகச் சென்ற திரு டிரம்ப், பயணத்தின் கடைசி நாளான வியாழக்கிழமை (செப்டம்பர் 18) இதனைக் கூறியிருந்தார்.

பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மரைச் சந்தித்த திரு டிரம்ப், விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். 

இந்தச் சந்திப்பிற்கு முதல்நாள் விண்ட்சர் மாளிகையில் மன்னர் சார்ல்சை அதிபர் டிரம்ப் சந்தித்தார்.

விருந்தோம்பலுக்குப் பின்னர் திரு டிரம்ப், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பிரிட்டிஷ் பிரதமரின் ‘செக்கர்ஸ்’ இல்லத்திற்குச் சென்றார். 

உக்ரேன், காஸா போர் உள்ளிட்ட சிக்கலான விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

உக்ரேன் போர் விவகாரத்தில் திரு டிரம்ப்பிற்கும் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் இடையே திரு ஸ்டார்மர், தம்மை ஒரு பாலமாக நிலைநிறுத்திக் கொண்டதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

திரு புட்டினுக்கு அனைத்துலகச் சமூகம் அழுத்தம் தர வேண்டும் என்று திரு ஸ்டார்மர் செப்டம்பர் 18ல் மீண்டும் வலியுறுத்தியதைச் செவிசாய்க்கும் மனநிலைக்குத் திரு டிரம்ப் வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

போர் நிறுத்தத்திற்கு எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்பட்ட பிறகும், திரு புட்டின் தொடர்ந்து போரில் ஈடுபடுவது குறித்து திரு டிரம்ப் அதிருப்தியில் உள்ளார்.

பேச்சுவார்த்தைக்குப் பிந்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய திரு டிரம்ப், “அதிபர் புட்டினுடனான எனது உறவின் காரணமாக உக்ரேன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது மிகவும் எளிதானது என்று நான் நினைத்திருந்தேன். அவர் என்னை ஏமாற்றிவிட்டார். அவர் உண்மையில் என்னை ஏமாற்றிவிட்டார்,” என்று கூறினார்.

எண்ணெய் விலை குறைந்தால் திரு புட்டின் போரிலிருந்து விலகிவிடுவார் என்று கூறிய திரு டிரம்ப், இதனால் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்