வாஷிங்டன்: சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ரகசியமாக அணுவாயுதச் சோதனைகளை நடத்தியிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதுபற்றி பொதுமக்களுக்குத் தெரியாது என்றும் அமெரிக்காவும் அதே போக்கைக் கடைப்பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“ரஷ்யா (அணுவாயுத) சோதனை நடத்துகிறது, சீனாவும் சோதனை நடத்துகிறது. ஆனால், அதைப் பற்றி அவை பேசுவதில்லை,” என்று திரு டிரம்ப் சிபிஎஸ் ஒளிவழியில் ‘60 மினிட்ஸ்’ நிகழ்ச்சிக்கு அளித்த நேர்காணலில் சொன்னார். அந்த நேர்காணல் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) வெளியிடப்பட்டது.
“சோதனை நடத்தாத ஒரே நாடாக நாங்கள் இருக்க விரும்பில்லை,” என்றும் அவர் கூறியிருந்தார். வடகொரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் இதுபோன்ற சோதனைகளில் ஈடுபடுவதாக திரு டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து குழப்பம் எழுந்துள்ளது. திரு டிரம்ப் கூறியபடி பார்த்தால் 1992ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா முதன்முறையாக அணுவாயுத சோதனைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது என அர்த்தமாகும்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 79 வயது டிரம்ப், முதலில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) சமூக ஊடகத்தில் இதனை அறிவித்தார். அன்றைய தினம் தென்கொரியாவில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்திப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு திரு டிரம்ப் இதனை அறிவித்தார்.

