கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூரின் தோற்றத்தை விமர்ச்சித்து 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் தேதியன்று டிக்டாக்கில் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டது.
அதில் அவர் தோற்றம் குறித்து கேலி செய்யப்பட்டது.
தாம் பாவம் செய்துவிட்டதாகவும் செய்வினை போன்ற காரியங்களில் ஈடுபட்டதாகவும் இஸ்லாத்துக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாகவும் அக்காணொளியில் தெரிவிக்கப்பட்டதாக ரோஸ்மா புகார் அளித்திருந்தார்.
மலேசியாவின் முன்னாள் பிரதமரின் மனைவி என்கிற முறையிலும் பல அறநிறுவனங்களின் அறங்காவலராக இருந்தவர் என்கிற முறையிலும் அந்தக் காணொளி தமக்கு எதிராக அவதூறு பரப்பி தமது கௌரவத்துக்குக் களங்கம் விளைவித்திருப்பதாக ரோஸ்மா தெரிவித்தார்.
இந்நிலையில், அந்த காணொளியைப் பதிவேற்றம் செய்த முகம்மது ஹில்மி கு டீன், ரோஸ்மாவுக்கு 100,000 ரிங்கிட் இழப்பீட்டுத் தொகை கொடுக்க வேண்டும் என்று மலேசிய உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) உத்தரவிட்டது.
தீர்ப்பளிக்கப்பட்ட தேதியிலிருந்து இழப்பீட்டுத் தொகை முழுமையாக ரோஸ்மாவைச் சென்றடையும் நாள் வரை அத்தொகைக்கு ஆண்டுக்கு ஐந்து விழுக்காடு வட்டி விதிக்க வேண்டும் என்று நீதிபதி அகமது ஷரிர் முகம்மது சாலே தெரிவித்தார்.

