18 வயதிற்கு மேற்பட்ட மலேசியர்களுக்கு 100 ரிங்கிட் வழங்குதொகை: பிரதமர் அன்வார்

1 mins read
1c6cc85f-0835-4dfe-acfc-92595820f531
பிரதமர் அன்வார் இப்ராகிமின் தொலைக்காட்சிவழி நேரடி உரையைக் கேட்கிறார் இந்த ஆடவர். - படம்: ஏஎஃப்பி

பெட்டாலிங் ஜெயா: வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி மெர்டேக்கா தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, 18 வயதும் அதற்கும் மேற்பட்ட மலேசியர்கள் அனைவர்க்கும் ஒருமுறை மட்டும் 100 ரிங்கிட் (S$30) வழங்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்திருக்கிறார்.

‘சாரா’ திட்டத்தின்கீழ் ‘மைகாட்’ வழியாக அத்தொகை வழங்கப்படும். அதனைக்கொண்டு நாடு முழுவதும் உள்ள 4,100க்கும் அதிகமான கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை வாங்கலாம்.

மைதின், லோட்டஸ், எக்கான்சேவ், 99ஸ்பீட்மார்ட் உள்ளிட்ட முன்னணிப் பேரங்காடிகளிலும் சில்லறைக் கடைகளிலும் பொருள் வாங்க அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

“குடும்ப அடிப்படையில் அல்லாமல், தனிமனித அடிப்படையில் இந்த உதவி வழங்கப்படுகிறது. அவ்வகையில், கணவன், மனைவி, 18 வயதை எட்டிய இரு பிள்ளைகள் அடங்கிய குடும்பத்திற்கு 400 ரிங்கிட் கிடைக்கும்,” என்று புதன்கிழமை (ஜூலை 23) பிரதமர் அன்வார் அறிவித்தார்.

இதன்மூலம் 22 மில்லியன் மலேசியர்கள் பயனடைவர் என்றும் அதற்காக 2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், மலேசிய தினத்திற்காக செப்டம்பர் 15ஆம் தேதி பொது விடுமுறை விடப்படும் என்றும் திரு அன்வார் அறிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்