கடல்துறைப் பாதுகாப்பு பற்றி அமெரிக்கா, சீனா கலந்துரையாடியதாகத் தகவல்

2 mins read
cee3a5b0-68d9-494e-8a82-8a187f4af2ad
அமெரிக்க, சீன ராணுவத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை வெளிப்படையானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் இருந்ததாக சீனக் கடற்படை கூறியுள்ளது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: அமெரிக்க ராணுவமும் சீன ராணுவமும் இவ்வாரம் கடல்துறைப் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக சீனக் கடற்படை தெரிவித்துள்ளது.

ஹவாயில் நடைபெற்ற அந்தப் பேச்சுவார்த்தை வெளிப்படையானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் இருந்ததாக சீனக் கடற்படை சனிக்கிழமை (நவம்பர் 22) வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

சீனாவின் மக்கள் விடுதலை ராணுவக் கடற்படை தனது அதிகாரத்துவ சமூக ஊடகப் பக்கத்தில் அந்த அறிக்கையைப் பதிவேற்றியது.

கடந்த பல மாதங்களாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நீடித்த வர்த்தகப் பதற்றங்கள் தணியத் தொடங்கியதைத் தொடர்ந்து இரு நாடுகளும் ராணுவத் தொடர்புகளை படிப்படியாக மீட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக நவம்பர் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை ஹவாயில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் சந்தித்துப் பேசி உள்ளனர்.

அமெரிக்க அதிபராக இரண்டாம் தவணைக் காலத்திற்கு டோனல்ட் டிரம்ப் பதவி ஏற்ற பின்னர் அமெரிக்கா, சீனா இடையில் நடைபெற்றிருக்கும் இரண்டாவது ராணுவப் பேச்சுவார்த்தை இது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற அந்தப் பேச்சுவார்த்தையின்போது ராணுவப் பிரச்சினைகள் இடம்பெற்றன.

தற்போது நடைபெற்று இருக்கும் பேச்சுவார்த்தை குறித்து விளக்கிய சீனக் கடற்படை, “இருதரப்பிலும் வெளிப்படையான, ஆக்கபூர்வமான கருத்துகள் பரிமாறப்பட்டன. குறிப்பாக, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான கடல்துறை மற்றும் ஆகாயத் துறைப் பாதுகாப்பு தொடர்பான தற்போதைய நிலவரத்தை இருதரப்பினரும் ஆராய்ந்தனர்,” என்று தெரிவித்துள்ளது.

அதேநேரம், கடற்பகுதியில் அமெரிக்காவின் சுதந்திர நடமாட்டத்தை தனது அறிக்கையில் சீனக் கடற்படை விமர்சித்துள்ளது.

அனைத்துலகக் கடல்நீர்ப் பரப்பில் சீனா சொந்தம் கொண்டாடி வரும் தென்சீனக் கடல் மற்றும் தைவான் நீரிணையில் அமெரிக்காவின் தலையீடு அடிக்கடி இருப்பதை அந்தப் படை சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த இரு கடற்பரப்பிலும் அவற்றுக்கு மேலேயும் காணப்படும் அமெரிக்கப் படையினரின் கப்பல், விமான நடமாட்டத்தைக் குறிப்பிட்ட அது, “எந்தவொரு மீறலையும் சினமூட்டலையும் சீனா உறுதியாக எதிர்க்கிறது,” என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க, சீனத் தற்காப்பு அமைச்சர்கள் அண்மையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் சந்தித்துப் பேசினர். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஜின்பிங்கும் தென்கொரியாவில் வர்த்தக உடன்பாட்டின் தொடர்பில் நேரடியாகச் சந்தித்த பின்னர் அந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

குறிப்புச் சொற்கள்