கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது, தமது 100வது பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்ன பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு நன்றி கூறியுள்ளார்.
தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட சிறப்பு நேரடி வலையொலி பதிவில் பேசிய டாக்டர் மகாதீர், 100 வயதை எட்டியது பாக்கியம் என்றபோதும் அச்சமளிக்கிறது என்றார்.
“எனது 100வது பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கூறிய திரு அன்வார் இப்ராஹிம் அனுப்பிய கடிதம் கிடைத்ததில் மகிழ்ச்சி,” என்ற டாக்டர் மகாதீர், தமது 100வது பிறந்தநாள் அன்று ஏராளமான வாழ்த்துகளைப் பெற்றதாகக் கூறினார்.
தமக்குக் கேக்குகள், கடிதங்கள், பூக்கள் ஆகியவற்றை அனுப்பியோருக்கு நன்றி சொன்ன டாக்டர் மகாதீர், 100 வயதை எட்டியது அச்சத்தைத் தருவதாகவும் சொன்னார்.
வலையொலி மூலம் மக்களைச் சந்திக்க முடிந்ததாகவும் வழக்கத்தைவிட பலர் தம்மை வந்து பார்த்ததாகவும் குறிப்பிட்ட டாக்டர் மகாதீர், பல்வேறு விவகாரங்களுக்கு விளக்கம் தர வலையொலி தமக்கு உதவியதைச் சுட்டினார்.
காஸாவில் தொடரும் போர், சீனா, ஜப்பான் ஆகிய ஆசிய நாடுகள்மீது தமக்குள்ள நல்ல எண்ணம் போன்றவற்றை வலையொலியில் டாக்டர் மகாதீர் பகிர்ந்துகொண்டார்.
அவற்றோடு பிரதமரான தமது பயணம், அதற்கு யாரெல்லாம் துணைபுரிந்தனர் போன்றவற்றையும் அவர் நினைவுகூர்ந்தார்.
1925ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி பிறந்த டாக்டர் மகாதீர், மலேசியாவின் நான்காம் மற்றும் ஏழாம் பிரதமராகப் பதவி வகித்தார். 1981ஆம் ஆண்டிலிருந்து 2003ஆம் ஆண்டு வரை பிரதமராக முதல் தவணைக் காலத்துக்கு அவர் பொறுப்பு வகித்தார். அவரது இரண்டாம் தவணைக் காலம் 2018ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரை நீடித்தது.