டெல் அவிவ்: கத்தாரும் அமெரிக்காவும் மேம்பட்ட தற்காப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டை இறுதி செய்யும் தருவாயில் உள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறினார். கடந்த வாரம் ஹமாஸ் அரசியல் தலைவர்கள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை அடுத்து செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) டெல் அவிவில் இருந்து டோஹாவுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
வளைகுடாவில் கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து கத்தாரை ஆதரித்து அரபு, இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் உச்சநிலைக் கூட்டம் நடத்திய வேளையில், ஹமாஸ் தலைவர்கள் எங்கிருந்தாலும் அவர்கள்மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறியுள்ளார்.
காஸா போரில் சண்டைநிறுத்தம் ஏற்பட இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே சமரசப் பேச்சாளராகக் கத்தார் தனது பங்கைத் தொடர வேண்டும் என்று திரு ரூபியோ அழைப்பு விடுத்தார். அமைதி ஒப்பந்தம் ஏற்பட மிகக் குறைந்த காலமே இருப்பதாக அவர் கூறினார்.
“உலகில் ஏதாவது ஒரு நாடு சமரசப் பேச்சில் உதவ முடியும் என்றால், அது கத்தார்தான்” என்றார் அவர்.
இஸ்ரேலியத் தாக்குதலை ‘கோழைத்தனமானது, துரோகம்’ என்று கத்தார் சாடியது. எனினும், எகிப்து, அமெரிக்காவுடன் இணைந்து சமரசப் பேச்சாளராகச் செயல்படுவதை அது தடுக்காது என்று கூறியது.

