கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் பதவி விலகவேண்டும் என்று கூறி தலைநகர் கோலாலம்பூரில் சனிக்கிழமை (ஜூலை 26) பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனல் ஏற்பாடு செய்துள்ளது. அந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஸ் கட்சி, ஆர்ப்பாட்டத்துக்குப் பேராதரவு வழங்கியது.
கோலாலம்பூரின் நகர மையத்தில் நான்கு வெவ்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். அங்கிருந்து அவர்கள் மலேசியாவின் முக்கிய அடையாளமான மெர்டேக்கா சதுக்கத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.
பிரதமர் அன்வார் பதவி விலகவேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பதவியேற்ற திரு அன்வாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக ஜமேக் பள்ளிவாசல், சோகோ மால் கடைத்தொகுதி, மத்திய சந்தை ஆகியவற்றிலிருந்து பேரணியாகத் தொடங்கிய கூட்டத்தினரும் அதில் சேர்ந்துக்கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் அதிகபட்சம் 10,000க்கும் 15,000க்கும் இடைப்பட்டோர் ஈடுபடுவர் என்று மலேசியக் காவல்துறை முன்னுரைத்திருந்தது.
ஆனால் மலேசிய அரசாங்கத்துடன் அதிருப்தி அடைந்துள்ள கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் ஆர்ப்பாட்டத்தில் இறங்குவர் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தன.
முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டது. மலேசியாவின் முன்னாள் பிரதமர்களாக டாக்டர் மகாதீர் முகம்மது, முகைதீன் யாசின் ஆகியோரும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கும் ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து உரையாற்றுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல மாலை நேரத்தில் டாக்டர் மகாதீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தை அடைந்தார்.
ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு கோலாலம்பூரில் உள்ள முக்கியமான இடங்களில் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டன.
ஜூலை 26 அன்று மலாய்க்காரர்கள் பெருமளவில் கூடியிருப்பது, பிரதமர் அன்வார், சமூகத்தின் கவலைகளை நிவர்த்தி செய்யத் தவறியதைப் பிரதிபலிக்கிறது என்று சிங்கப்பூர் அனைத்துலக விவகாரங்களுக்கான ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆய்வாளர் ஓ ஐ சன் கூறினார். திரு அன்வார் இந்தக் குறிப்பிட்ட பிரிவு மக்களிடமிருந்து தேவையான ஆதரவைப் பெற முடியவில்லை என்பதற்கான அறிகுறியாக இது இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
“வேகமாக நகரமயமாகும் மலாய் மக்கள்தொகை, அன்வார் அவர்களுக்கு நிலையான வேலைகள், போதுமான வருமானம், தாக்குப்பிடிக்கக்கூடிய விலைவாசி ஆகியவற்றை வழங்குவதை இன்னும் அவர்களால் காண முடியவில்லை. மேலும் பலர் பாஸ் கட்சியின் மாற்று சமூக அரசியல் பிரசாரத்தால் ஈர்க்கப்படுகிறார்கள்,” என்றும் டாக்டர் ஓ கூறினார்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் குறைந்தது 18,000 பேர் ஈடுபட்டதாகக் காவல்துறை தகவல் வெளியிட்டதாக சனிக்கிழமை (ஜூலை 26) மாலை 6.15 மணி அளவில் மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.
ஆர்ப்பாட்டத்தின்போது அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை என்று காவல்துறை கூறியது.

