கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம் அமல்படுத்த எண்ணியிருக்கும் நகர்ப்புற புதுப்பிப்புச் சட்டத்திற்கு எதிராக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) நாடாளுமன்றக் கட்டடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்தப் போராட்டத்தில் பொதுமக்களுடன் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டக்கார்களில் சிலர் ‘கில் த பில்’ (Kill the Bill) என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி இருந்தனர்.
பல்வேறு குடியிருப்புச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பெரும்பான்மையினராகக் காணப்பட்டனர்.
கேஇபி மலிவு விலை வீட்டு குடியிருப்பாளர்கள் செயற்குழு, கோலாலம்பூர் குடியிருப்பாளர் நீடித்த மேம்பாட்டுச் சங்கம் ஆகியன அவற்றுள் அடங்கம்.
நகரப்புறப் புதுப்பிப்பு மசோதா இவ்வாரம் நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்கு விட திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால், அதற்குள் மசோதாவில் மாற்றம் செய்யவேண்டும் என்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கை.
அந்தக் கோரிக்கை அடங்கிய மனுவை வீடமைப்பு, நகர மேம்பாட்டு துணை அமைச்சர் ஐமான் ஆதிரா சபுவிடம் அவர்கள் அளித்தனர்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள் பின்னர் கலைந்து சென்றனர்.