ஜகார்த்தா: இந்தோனீசியாவின் புதிய தலைநகரான நுசந்தாரா எழுப்பப்பட்டு வரும் பகுதியில் பாலியல் தொழில் நடப்பதை நுசந்தாரா தலைநகர் அமைப்பு (ஐகேஎன்) ஆணையத் தலைவர் பசுக்கி ஹடிமுல்ஜோனோ உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், நகரின் முக்கியப் பகுதியில் பாலியல் தொழில் நடக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“பாலியல் தொழில் செப்பாக்கு பகுதியில் நடக்கிறது. அப்பகுதி மேம்பாட்டுப் பகுதியிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது,” என்று அவர் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 9) கூறியதாக இந்தோனீசிய செய்தி நிறுவனமான கொம்பாஸ் தெரிவித்தது. செப்பாக்கு, கிழக்கு கலிமந்தானில் உள்ள வட பெனாஜாம் பாசர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.
“அந்நடவடிக்கைகள் நடப்பதை ரமலானுக்காக நோன்பு அனுசரிக்கும் மாதத்தில் கண்டறிந்தோம். பல்வேறு சட்ட ஒழுங்கு அமலாக்க அமைப்புகளுடன் சேர்ந்து ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்,” என்று திரு பசுக்கி குறிப்பிட்டார். வட பெனாஜாம் பாசர் காவல்துறை உள்ளிட்ட அமைப்புகள், ஐகேஎன் ஆணையத்துடன் சேர்ந்து பாலியல் நடிவடிக்கைகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகள் எடுத்ததாக அவர் சொன்னார்.
“சந்தேகம் தரும் எட்டு முகாம்களை நாங்கள் அகற்றிவிட்டோம்,” என்று கூறிய அவர், “அதேவேளை, பாலியல் நடவடிக்கைகள் வேறு இடத்துக்கு மாறி மேற்கொள்ளப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது,” என்றும் சுட்டினார்.
உள்ளூர் சட்ட அமலாக்க அமைப்புகளுடன் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும் என்று திரு பசுக்கி உறுதியளித்தார்.
“நாங்கள் இதை மூடி மறைக்கவில்லை. பாலியல் தொழில் நடந்தால் நாங்கள் நிச்சயமாக கடும் நடவடிக்கை எடுப்போம்,” என்று அவர் கூறினார்.
நுசந்தாரா பகுதியில் இயங்கும் பாலியல் தொழிலாளர்களில் பெரும்பாலோர் இணையம்வழி சேவை வழங்குவதாக வட பெனாஜாம் பாசர் பொது ஒழுங்கு அமைப்பின் (North Penajam Paser Public Order Agency) தலைவரான பாகெண்டா அலி விவரித்தார். உள்ளூர் அதிகாரிகள் இதுவரை மூன்று முறை முறியடிப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் 64 பாலியல் தொழிலாளர்கள் பிடிபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தடுத்து வைக்கப்பட்டு மூன்று நாள்களுக்குள் செப்பாக்கு பகுதியிலிருந்து கிளம்புமாறு பிடிபட்டவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

