முன்னாள் உரிமையாளர் முகமது அல் ஃபயாட் பாலியல் வன்கொடுமை செய்ததாக 150 ஊழியர்கள் புகார்

வன்கொடுமை புகார் அளித்த பிரபல ஹெரோட்ஸ் வர்த்தக ஊழியர்கள்

2 mins read
20074194-1ede-4ea5-a956-a4f32ca84525
ஹெரோட்ஸ் என்ற பிரபல வர்த்தகத்தை 1985லிருந்து 2010ஆம் ஆண்டு வரை நிறுவிய முகமது அல் ஃபாயட், 2023ஆம் ஆண்டு, 94வது வயதில் காலமானார். - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: லண்டனின் பிரபல ஹேரட்ஸ் வர்த்தகத்தின் உரிமையாளர் முகமது அல் ஃபாயாட் குற்றம் புரிந்ததாக குறைந்தது 146 பேர் பிரிட்டி‌ஷ் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அதிகாரிகள் தொடங்கிய புதிய விசாரணையை அடுத்து அந்தப் புகார்கள் கொடுக்கப்பட்டதாகப் பிரிட்டி‌ஷ் காவல்துறை புதன்கிழமை (ஆகஸ்ட் 13) உறுதிபடுத்தியது.

“முகமது அல் ஃபாயாட்டின் குற்றங்களுக்குத் துணைப்புரிந்தோர்மீதான விசாரணை தொடர்கிறது,” என்று லண்டன் காவல்துறை பகிர்ந்துகொண்டது.

2023ஆம் ஆண்டு, 94வது வயதில் காலமான எகிப்திய வர்த்தகர் முகமது அல் ஃபயாட் ஹேரட்ஸ் கடையில் வேலைக்குச் சேர்ந்த பல இளம் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக பிபிசி செய்தி நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒளிபரப்பிய விசாரணையில் தெரியவந்தது.

லண்டன் காவல்துறை எப்படி இந்த வழக்கை இதற்குமுன் கையாண்டது என்பதை ஆராய்வதோடு புதிதாக விசாரிக்கவும் தொடங்கியுள்ளது. அதில் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்று நம்பப்படுவோரும் விசாரிக்கப்படுகின்றனர்.

ஆகஸ்ட் 11ஆம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில் குற்றம் குறித்து புகார் அளிக்க பாதிப்பட்டோரில் 146 பேர் முன்வந்தனர். அவர்கள் எத்தகைய பாதிப்புகளை எதிர்கொண்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

“நாங்கள் பாதிக்கப்பட்டோருக்குத் தொடர்ந்து ஆதரவு தருகிறோம். முகமது அல் ஃபாயாட்டால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள், அல்லது ஆடவரின் குற்றங்கள் குறித்து அறிந்தவர்கள் முன்வந்து எங்களை அணுகும்படி கேட்டுக்கொள்கிறோம், என்று காவல்துறை குறிப்பிட்டது.

1985லிருந்து 2010ஆம் ஆண்டு வரை முகமது அல் ஃபாயாட் நிறுவிய ஹேரட்ஸ் கடையில் வேலை செய்தபோது துன்புறுத்தலுக்கு ஆளானதாக நம்பப்படும் பெண்களுக்கு இழப்பீட்டுத் திட்டத்தை இவ்வாண்டு மார்ச் மாதம் அறிவித்தது.

அந்த இழப்பீட்டுத் திட்டத்துக்கு பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் 100க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் ஜூலை மாதம் விண்ணப்பம் செய்தனர்.

குறிப்புச் சொற்கள்