தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜப்பானியப் பிரதமரை மெச்சிய அதிபர் டிரம்ப்

2 mins read
f665e523-c2a6-40eb-b3b5-06035b25bdcd
கனிம வளங்கள் தொடர்பாகக் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்துடன் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (இடது), ஜப்பானியப் பிரதமர் சானே தகாய்ச்சி. - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சானே தகாய்ச்சியை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

ஜப்பானுக்கு அதிபர் டிரம்ப் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 28) பிரதமர் தகாய்ச்சியும் அதிபர் டிரம்ப்பும் சந்தித்துப் பேசினர்.

ஜப்பானின் ராணுவ ஆற்றலை மேம்படுத்தி அமெரிக்காவிடமிருந்து கூடுதல் தற்காப்புச் சாதனங்களை வாங்கப் பிரதமர் தகாய்ச்சி மேற்கொண்டு வரும் முயற்சிகளை அதிபர் டிரம்ப் மெச்சினார்.

அதிபர் டிரம்ப், கம்போடியா-தாய்லாந்து மற்றும் இஸ்‌ரேல்-ஹமாஸ் இடையிலான சண்டை நிறுத்தத்துக்குப் பாடுபட்டு அதை நடைமுறைப்படுத்துவதற்குப் பெரும் பங்காற்றியதாகப் பிரதமர் தகாய்ச்சி பதிலுக்குப் புகழ்ந்தார்.

நோபெல் அமைதிப் பரிசு பெறும் அனைத்துத் தகுதிகளும் அதிபர் டிரம்ப்புக்கு இருப்பதாக அவர் கூறினார்.

நோபெல் அமைதிப் பரிசுக்கு அதிபர் டிரம்ப்பை முன்மொழியப்போவதாகப் பிரதமர் தகாய்ச்சி தெரிவித்ததாக வெள்ளை மாளிகைச் செய்தித்தொடர்பாளர் கெரோலைன் லெவிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முக்கியக் கனிம வளங்கள் விநியோகத்துக்கு ஆதரவு வழங்கும் ஒப்பந்தம் ஒன்றில் அதிபர் டிரம்ப்பும் பிரதமர் தகாய்ச்சியும் கையெழுத்திட்டனர்.

திறன்பேசிகள், போர் விமானங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யத் தேவைப்படும் கனிம வளங்கள் விநியோகத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க ஜப்பானும் அமெரிக்காவும் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

“மிகவும் வலுவான கைகுலுக்கல்,” என்று ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் உள்ள அகசாக்கா அரண்மனையில் பிரதமர் தகாய்ச்சியுடன் படமெடுத்துக்கொண்டபோது அதிபர் டிரம்ப் கூறினார்.

சந்திப்பு ஆக்கபூர்வமாக இருந்ததையும் இருநாடுகளிடையிலான நட்புறவு மேலும் வலுவடைந்திருப்பதையும் இது காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

“மிகச் சிறந்த பிரதமர்களில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள். நீங்கள் ஜப்பானின் முதல் பெண் பிரதமர். அதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது மிகப் பெரிய சாதனை,” என்று பிரதமர் தகாய்ச்சியை அதிபர் டிரம்ப் மெச்சினார்.

குறிப்புச் சொற்கள்