பாலி: பாலித் தீவின் படுங் வட்டாரத்தில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் தொடர்பில் இரு ஆடவர்களுக்குக் காவல்துறையினர் வலைவீசி உள்ளனர்.
அந்த இரு சந்தேக நபர்களும் ஆஸ்திரேலிய பேச்சுவழக்கில் ஆங்கிலம் பேசியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
இதனை பாலி காவல்துறையின் மூத்த ஆணையாளர் அரியாசாண்டி செய்தியாளர்களிடம் கூறினார்.
“சம்பவத்தின்போது அங்கு இருந்தவர்கள், சந்தேகத்திற்குரிய இரு ஆடவர்களின் உரைநடையைக் கவனித்து அதுகுறித்து காவல்துறையிடம் கூறினர்,” என்றார் அவர்.
சனிக்கிழமை (ஜூன் 14) அதிகாலை புறநகர் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஆஸ்திரேலியர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் கடுமையாகக் காயமடைந்தார்.
உயிரிழந்தவர் ஸிவான் ராட்மனோவிக், 32, என்றும் காயமடைந்தவர் சானார் கானிம், 34, என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறைப் பேச்சாளருமான திரு அரியாசாண்டி தெரிவித்தார். காயமடைந்தவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தப்பி ஓடிய இரு வெளிநாட்டவரையும் பாலி காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சம்பவம் நிகழ்ந்த வீட்டின் அருகே இருந்தவர்களில் சிலர் சம்பவத்தை நேரில் கண்டனர். அவர்களில் எழுவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி படக்கருவியில் பதிவானவற்றையும் காவல்துறையினர் பார்வையிட்டனர்.
விசாரிக்கப்படும் எழுவரில் உயிரிழந்தவரின் மனைவியும் உயிரிழக்கும் முன்னர் உதவிக்கு வந்த சிலரும் அடங்குவர்.
கடந்த ஆண்டு பாலித் தீவுக்கு 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் வருகை தந்ததாக அதிகாரத்துவ சுற்றுப்பயணத் தரவுகள் தெரிவிக்கின்றன.