வாஷிங்டன்: அமெரிக்காவின் தெற்கு எல்லைப் பகுதியைக் கடந்து வந்து கள்ளக் குடியேறிகளைத் தடுத்து வைத்து விரைவாக அவர்களது சொந்த நாட்டுத் திருப்பியனுப்பும் நடவடிக்கைக்கு அந்நாட்டு நீதிபதி ஒருவர் தடை விதித்தார்.
கள்ளக் குடியேறிகளைப் பெருவாரியாக நாட்டைவிட்டு வெளியேற்றும் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அதிரடித் திட்டத்தைப் பாதிக்கும் வகையில் இந்த நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது.
அதிபர் டிரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்ட குடிநுழைவுக் கொள்கை முடிவை ஒட்டி இந்தப் பிரச்சினை எழுந்தது.
ஈராண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வசித்து வருவதை நிரூபிக்க முடியாத, நிலையான சட்டபூர்வ அங்கீகாரம் இல்லாத குடியேறிகளை நீதிமன்ற நடவடிக்கைகள் இன்றி விரைவாக சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்ப உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
இத்தகைய நடவடிக்கைகள் புதிதல்ல. குடியரசு, ஜனநாயகக் கட்சி அரசாங்கங்கள் இரண்டுமே இதனை மேற்கொண்டு வந்துள்ளன.
இருந்தபோதும், அமெரிக்காவின் தெற்கு எல்லைக்கு அருகில், வழக்கமாக 100 மைல்களுக்குள், 14 நாள் காலக்கெடுவுக்குள் கைது செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தன.
ஆனால், டிரம்ப் நிர்வாகம் இந்த நடைமுறையை நாடு முழுவதும் விரிவுபடுத்த முயல்கிறது.
கொலம்பியா மாநிலத்தைச் சேர்ந்த அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜியா எம். காப், தமது தீர்ப்பில், டிரம்ப் நிர்வாகம் முடிந்தவரை விரைவாக அதிகமானோரை வெளியேற்றும் ஒரு வேகமான முயற்சியில் அலட்சியமாக செயல்படுவதாகச் சாடினார். இது முறையான சட்ட நடைமுறைகளை மீறி, நியாயமற்ற தடுப்புக்காவலுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தீர்ப்பில் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தெற்கு எல்லைக்கு அருகில் ‘ஒரு குடியேற்ற அதிகாரியுடன் ஒற்றை உரையாடலுக்குப் பிறகு’ அமெரிக்காவுடன் குறைந்தபட்ச தொடர்புடைய குடியேறிகளைத் திருப்பி அனுப்புவது போல் இருந்த ஒரு செயல்முறையை, நியூயார்க் போன்ற தொலைவான இடங்களிலும் ஓர் இயல்பான நடைமுறையாக நிர்வாகம் மாற்றியதாக அவர் குறிப்பிட்டார்.
டிரம்ப்பின் நிதானமற்ற இந்தச் செயல்முறை மூலம் மக்களைத் தவறாக வெளியேற்ற வழிவகுக்கும் என்றும் அவர் கருத்துரைத்தார்.