ஜார்ஜ் டவுன்: சட்டவிரோத சுற்றுலா நடவடிக்கைகளை முடக்க சுற்றுப்பயணிகள் தங்கள் பங்கை செய்ய வேண்டும் என்று பினாங்கு சுற்றுலா வழிகாட்டிகள் சங்கத் தலைவர் கிளமெண்ட் லியாங் கூறியுள்ளார்.
உரிமம் பெறாத வழிகாட்டிகளும் சுற்றுலா நிறுவனங்களும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக சொன்ன அவர், அமலாக்க நடவடிக்கைகளைத் தவிர்க்கும் வழிகளையும் கண்டறிகின்றனர் என்றார்.
பினாங்கில் அத்தகைய சட்டவிரோத வழிகாட்டிகளையும் நிறுவனங்களையும் களையெடுக்க உதவும் அதிகாரம் சுற்றுப்பயணிகளிடம் உள்ளது என்று திரு லியாங் விளக்கினார்.
“சுற்றுப்பயணிகளின் ஒன்றுபட்ட முயற்சி சுற்றுலா அனுபவத்தின் தரத்தை மேம்படுத்துவதில் நீண்ட காலம் உதவும்,” என்று அவர் சுட்டினார்.
சுற்றுலா வழிகாட்டிகள், நிறுவனங்கள், திட்டங்கள் ஆகியவற்றை நன்கு சோதித்து பின் முன்பதிவுகளைச் செய்ய வேண்டும்,” என்றார் திரு லியாங்.
பினாங்கைத் தளமாகக் கொண்ட நிறுவனம் உரிமம் பெறாத சுற்றுலா நிறுவனமாகச் செயல்பட்டு வந்ததற்காகக் குற்றம் சுமத்தப்பட்டதை அடுத்து திரு லியாங்கின் கருத்துகள் வெளிவந்தன.
சுற்றுலா தொழிற்துறை சட்டத்தின்கீழ் ரினியுவேஜ் குழுமத்துக்கு நீதிமன்றம் 30,000 ரிங்கிட் அபராதம் விதித்தது. அதோடு நிறுவனத்தைச் சார்ந்தவர்களுக்கு 12 மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
உரிமம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே சுற்றுலா வணிகத்தை நடத்துவதை உறுதிசெய்யும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தப்போவதாகச் சுற்றுலா, கலைகள், கலாசார அமைச்சு குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
சந்தேகத்திற்குரிய வகையில் மலிவாக இருக்கக்கூடிய சுற்றுலாத் திட்டங்களுக்கு விழுந்துவிட வேண்டாம் என்று திரு லியாங் எச்சரித்தார். அத்தகைய திட்டங்களில் மறைமுக சிக்கல்கள் இருக்கும் என்றார் அவர்.
சுற்றுலா வழிகாட்டிகளும் நிறுவனங்களும் சரிவர உரிமம் பெற்றுள்ளனவா என்பதை இணையம் வழி சரிபார்க்கும்படியும் திரு லியாங் ஊக்குவித்தார்.
சுற்றுலா வழிகாட்டி அல்லது நிறுவனம் பற்றி புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.