தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பினாங்கு துப்பாக்கிச்சூடு: நூலிழையில் தப்பிய ஆடவர்

1 mins read
f6c97fa5-4db5-4538-b278-f79b89630aa9
பினாங்கில் உள்ள பள்ளிக்கு வெளியே காரில் அமர்ந்திருந்த ஆடவர் நூலிழையில் துப்பாக்கிச்சூட்டிலிருந்து தப்பினார். - படம்: த ஸ்டார்

பட்டர்வர்த்: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் துரிதமாக யோசித்த ஆடவர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டிலிருந்து நூலிழையில் உயிர் பிழைத்தார்.

கெம்பாங்சான் சுங்கை நியோர் என்ற பள்ளிக்கூடத்துக்கு வெளியே ஜூலை 1ஆம் தேதி மாலை 5.30 மணிவாக்கில் காரில் அமர்ந்திருந்த ஆடவரை நோக்கி இரண்டு சந்தேக ஆடவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

முகத்தை முழுமையாக மூடியிருந்தவாறு மோட்டார்சைக்கிளில் வந்த ஆடவர்கள் காரில் அமர்ந்திருந்தவரை நோக்கி வந்தனர்.

அவர்களில் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து ஓட்டுநர் பக்கம் இருந்த சன்னலை நோக்கி பலமுறை சுட்டார்.

அதிர்‌‌‌ஷ்டவசமாக ஆடவர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார். அவரது காருக்கு மட்டும் சேதம் ஏற்பட்டது.

காரில் அமர்ந்திருந்த தம்மை நோக்கி துப்பாக்கிக்காரர்கள் வருவதை ஆடவர் கண்டுகொண்டதாகத் தெரிகிறது.

துப்பாக்கியைப் பார்த்த அவர் உடனடியாக தமது இருக்கையை பின்பக்கமாக மடக்கினார். அந்தச் சமயத்தில் துப்பாக்கிக்காரன் சன்னலை நோக்கிச் சுட்டதாகக் கூறப்படுகிறது.

சமயோசித யோசனையால் ஆடவருக்குக் காயம் ஏற்படவில்லை. சில விநாடிகளில் துப்பாக்கிக்காரனும் உடந்தையாக வந்த ஆடவரும் சம்பவ இடத்தைவிட்டு தப்பியோடினர்.

வடக்கு செபாராங் பேராய் காவல்துறைத் தலைவர் அனுவார் அப்துல் ரஹ்மான் சம்பவம் நடந்ததை உறுதிப்படுத்தியதோடு விசாரணைத் தொடர்வதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்