களைப் பெருக்கத்தால் விவசாயிகள் இழந்ததை மீட்க பினாங்கு உதவிக்கரம்

1 mins read
adfa615f-fc13-4e4e-b67a-44280d609bab
நெற்பயிருக்கான சத்துகளையும் சூரிய ஒளி, நீர் போன்ற வளங்களையும் களைகள் பங்கிட்டுக்கொள்வதால் விளைச்சல் வீழ்ச்சி அடைந்ததாக பினாங்கு சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. - படம்: பெர்னாமா

ஜார்ஜ் டவுன்: மலேசியாவின் பினாங்கு மாநில அரசாங்கம், நெற்பயிர்கள் இடையே ஊடுருவி வேகமாகப் பரவிவரும் களைகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உதவ முன்வந்துள்ளது.

இவ்வாண்டின் முதல் அறுவடை பருவத்தில் களைகளின் பெருக்கத்தால் நெற்கதிர் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை மீட்டுத் தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த மாநிலத்தின் விவசாயத் தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைப்பின் தலைவர் ஃபாஹ்மி ஸைனல் தெரிவித்துள்ளார்.

‘கெலாடி அகாஸ்’ என்று மலாய் மொழியில் அழைக்கப்படும் களைகள், நெல் விளைச்சலைக் கடுமையாகப் பாதித்துவிட்டதாகவும் சில இடங்களில் ஒட்டுமொத்த அறுவடையையே அழித்துவிட்டதாகவும் அவர் திங்கட்கிழமை (நவம்பர் 17) சட்டமன்றத்தில் கூறினார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்குப் பதிலளித்த அவர், நெல் விளைச்சல் திடீரென்று வீழ்ச்சி அடைந்ததற்கான அடிப்படைக் காரணம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சொன்னார்.

விதைகள் மற்றும் வேர்த்தண்டுகள் வாயிலாக வேகமாகப் பரவும் களைகள், நெற்பயிர்களுக்கான ஊட்டச்சத்துகள், சூரிய ஒளி மற்றும் தண்ணீரை உறிஞ்சி வளர்வதாகவும் திரு ஸைனல் தெரிவித்தார்.

களைகள் ஒருபக்கம் விளைச்சலைக் குறைத்திருக்கும் அதேநேரம், மோசமான நீர்ப்பாசனம், அனுமதி வழங்கப்படாத விதைகள், தரமற்ற வேளாண் நடைமுறைகள், தொழிலாளர் பற்றாக்குறை ஆகியனவும் விளைச்சலைப் பாதித்துள்ளதாக பினாங்கு சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்