அமைதியை விரும்பும் தைவானிய எதிர்க்கட்சித் தலைவர்

2 mins read
3aadda46-26e9-419c-a8f1-4a9b14058e1b
தைவானியப் பாதுகாப்புப் படைகள், போர் குறித்த மிரட்டலைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாகக் குவோமின்டாங் கட்சியின் புதிய தலைவர் செங் லி வுன் கூறுகிறார். - படம்: ராய்ட்டர்ஸ்

தைப்பே: தைவானில் எதிர்க்கட்சியின் புதிய தலைவராகத் திருவாட்டி செங் லி வுன் சனிக்கிழமை (நவம்பர் 1) பொறுப்பேற்றுள்ளார். சீனாவுடன் போர் மூளக்கூடும் என்று அவர் எச்சரித்தார். அதே நேரம், பெய்ஜிங்குடன் அமைதியுடன் இயங்குவதற்குப் புதிய சகாப்தத்தைத் தொடங்கப்போவதாக அவர் உறுதிகூறினார்.

முன்னாள் ஆட்சிமன்ற உறுப்பினரான திருவாட்டி செங், தைவானின் ஆகப் பெரிய எதிர்க்கட்சியான குவோமின்டாங்கின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். பெய்ஜிங்குடன் ராணுவ, அரசியல் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் அவர் பதவிக்கு வந்துள்ளார்.

சீனா, ஜனநாயக முறையில் ஆளப்படும் தைவானை அதன் சொந்த வட்டாரமாகக் கருதுகிறது.

“இது மிகவும் மோசமான நேரம். தைவானிய நீரிணை மிகப் பெரிய ராணுவ ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. உலகம் அதனை அணுக்கமாகக் கவனிக்கிறது,” என்று திருவாட்டி செங், தைப்பேயில் உள்ள உயர்நிலைப் பள்ளியின் உள்ளரங்கில் கட்சி உறுப்பினர்களிடம் சொன்னார்.

“தைவானியப் பாதுகாப்புப் படைகள், போர் குறித்த மிரட்டலைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றன,” என்றார் அவர்.

குவோமின்டாங் கட்சி, பெய்ஜிங்குடன் அணுக்கமாக உறவை வைத்துக்கொள்ள விரும்புவது வழக்கம். ஜனநாயக முற்போக்குக் கட்சி தலைமையிலான தைவானிய அரசாங்கம், சீனாவின் உரிமை கோரல்களுக்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

55 வயது திருவாட்டி செங், பெய்ஜிங்குடன் உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அவர் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்கவிருப்பதற்காகச் சீன அதிபர் ஸி ஜின்பிங் சென்ற மாதம் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். மறுஒருங்கிணைப்பு முயற்சிகளை முன்னெடுக்குமாறு சீன அதிபர் அதில் அவரைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

குவோமின்டாங் கட்சியின் புதிய துணைத் தலைவர் சியாவ் சு-சென் இந்த வாரம் சீனாவுக்குச் சென்றிருந்தார். அங்கு அந்நாட்டின் தைவானிய விவகாரங்களுக்கான அலுவலகத்தின் தலைவர் சோங் தாவோவை அவர் சந்தித்துப் பேசினார்.

சீனாவுடனான கொள்கைகள் எப்படி இருக்கும் என்பது குறித்துத் திருவாட்டி செங் அவரின் முதல் உரையில் எதுவும் சொல்லவில்லை. சீனாவுக்குச் செல்வாரா என்பதைப் பற்றியும் அவர் குறிப்பிடவில்லை. ஆனால் அமைதிக்காகப் பணியாற்றப்போவதாய்த் திருவாட்டி செங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்