ஜகார்த்தா: இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தா சாலைகள் செப்டம்பர் 5ஆம் தேதி அமைதியாகக் காணப்பட்டன.
ஒரு வாரப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
மாணவர்கள் தலைமையிலான போராட்டத்தில் ஊழியர்கள், வலதுசாரிக் குழுக்கள், மக்கள் அனைத்துத் தரப்பினரும் சேர்ந்து கடந்த வாரம் முழுவதும் சாலைகளை நிரப்பியிருந்தனர்.
நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
இந்த நிலையில் காவல்துறை வாகனம் ஒன்று, விநியோகிப்பாளர் ஒருவர்மீது மோதி அவர் இறந்ததால் மக்கள் கொதிப்படைந்தனர். ஆர்ப்பாட்டம் மோசமான கட்டத்தை அடைந்தது. வன்முறை வெடித்தது.
அதிபர் பிரபோவோ சுபியாந்தோ பதவியேற்ற பிறகு அவருக்கு ஏற்பட்ட முதல் மோசமான சோதனை.
ஆர்ப்பாட்டம் செய்தவர்களை அமைதிப்படுத்த பல முறை வேண்டுகோள் விடுத்தார். பொறுமை காக்கும்படி கேட்டுக் கொண்டார்.
ஆனால் மக்கள் கலைவதாக இல்லை.
தொடர்புடைய செய்திகள்
இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க வந்த காவல்துறை கவச வாகனம் ஒன்று, விநியோகிப்பு ஊழியர்மீது மோதி அவர் இறந்ததால் ஆர்ப்பாட்டம் தலைநகருக்கு வெளியே நாடு முழுவதும் பரவத் தொடங்கியது.
பாதுகாப்புப் படைக்கும் ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஆயிரம் பேருக்கு மேல் காயம் அடைந்தனர். வன்முறையில் குறைந்தது பத்து பேர் உயிரிழந்தனர்.
செப்டம்பர் 4ஆம் தேதி மாணவர் குழுக்கள், அமைச்சர்களைச் சந்தித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக காவல்துறை நடந்துகொண்ட முறை பற்றியும் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகக் கொண்ட நாடான இந்தோனீசியாவில் நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டதால் பொது விடுமுறையான சனிக்கிழமை அன்று ஜகார்த்தாவில் அமைதி திரும்பியது.
நாடு முழுவதும் கலவரத்தில் ஈடுபட்ட ஏறக்குறைய 3,000 பேரை அதிகாரிகள் தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக நியூயார்க்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.

