ஜெருசலம்: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாகக் காஸாவில் வாழும் பாலஸ்தீன மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உலக மக்களின் கவனம் இஸ்ரேல் - ஈரான் மோதலுக்கு மாறியுள்ளதால் காஸா மக்களுக்குக் கிடைக்க வேண்டிய மனிதநேய உதவிகள் கிடைக்காமல் போகலாம் என்று அவர்கள் அச்சப்படுகின்றனர்.
தற்போது காஸாவில் வாழும் பாலஸ்தீன மக்கள் போதிய உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இணையச் சேவைகளும் அவ்வப்போதுதான் கிடைக்கிறது. அடிக்கடி இஸ்ரேலிய ராணுவமும் தாக்குதல் நடத்தி வருவதால் செய்வது அறியாது காஸா மக்கள் தவிக்கின்றனர்.
“தற்போது அனைவரும் ஈரானைப் பற்றிப் பேசத் தொடங்கியுள்ளனர். காஸா பிரச்சினைத் தள்ளிவைக்கப்படுகிறது,” என்று காஸாவில் வாழும் 71 வயது கலீல் அல்ஹலாபி கவலை தெரிவித்தார்.
“எனது குடும்பத்திற்குத் தேவையான உணவுப் பொருள்களை வாங்குவது எண்ணிப்பார்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது, 25 கிலோ கிராம் மாவு மூட்டை 350 டாலருக்கு மேல் விற்கப்படுகிறது,” என்றார் கலீல்.
வெள்ளிக்கிழமை (ஜூன் 13) காலை முதல் காஸாவில் உள்ள உதவிப்பொருள்கள் விநியோகம் செய்யும் சில இடங்கள் மூடப்பட்டிருந்தன.
இஸ்ரேல் ஈரானைத் தாக்கிய சில மணி நேரங்களில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
“உலக மக்களின் கவனம் இஸ்ரேல் - ஈரான்மீது சென்றால் இது இஸ்ரேலுக்குச் சாதகமாக அமையும். காஸாவில் நடப்பவை யாருக்கும் தெரியாது அதனால் இஸ்ரேல் அதன் போர் நடவடிக்கையில் பெரிதாக ஈடுபடலாம்,” என்று மத்திய காஸாவில் வாழும் 56 வயது ஷரிஃப் அல்பகூசி கூறினார்
இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையில் நடந்து வரும் பேச்சு வார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.
ஹமாஸ் போராளிகளைத் துடைத்தொழிக்காமல் போரை நிறுத்தப் போவதில்லை என்று இஸ்ரேல் உறுதியாக உள்ளது.
அதேநேரம் இஸ்ரேலின் கட்டுப்பாடுகளுக்கு அடிபணியமாட்டோம் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.