இஸ்லாமாபாத்: பாகிஸ்தான், நான்காண்டுகளில் இரண்டாவது முறையாக இஸ்லாமியக் கட்சி ஒன்றுக்குத் தடை விதித்துள்ளது.
அக்கட்சி உறுப்பினர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது ஐவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வியாழக்கிழமை (அக்டோபர் 23) தடை குறித்து அறிவிக்கப்பட்டது.
தெஹ்ரீக்-லபாய்க் பாகிஸ்தான் (டிஎல்பி) எனும் கட்சியின் ஆதரவாளர்கள், சாலைகளில் இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். காஸா போரை முடித்து வைக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து அறிவிக்கவிருந்ததை முன்னிட்டு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
டிஎல்பிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு பாகிஸ்தானிய அமைச்சரவை ஒருமித்தமாக ஒப்புதல் அளித்ததென அந்நாட்டு அரசாங்கம் அறிக்கையில் தெரிவித்தது.
“டிஎல்பி பயங்கரவாத, வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுகிறது,” என்று பாகிஸ்தானிய அரசாங்கம் சொன்னது.
தடையைத் தாங்கள் மறுப்பதாக டிஎல்பி கூறியது. இது அரசியலமைப்பில் இடம்பெறாத, பழி வாங்கும் நோக்கம் கொண்ட, சட்டவிரோதமான, சர்வாதிகார பாணியிலான நடவடிக்கை என்று அக்கட்சி அறிக்கை மூலம் கடும் கண்டனம் தெரிவித்தது.
டிஎல்பி, 2011 ஆண்டில் ஒரு குழுவாகத் தொடங்கப்பட்ட சன்னி முஸ்லிம் அமைப்பாகும். பின்னர் அது 2016ஆம் ஆண்டில் அரசியலுக்குள் நுழைந்தது.
2018ஆம் ஆண்டுத் தேர்தலில் டிஎல்பி இரண்டு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது.

