வாஷிங்டன்: பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற சண்டை நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் இரு நாடுகளின் எல்லையில் மீண்டும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
“இஸ்தான்புல்லில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. அதோடு பேச்சும் முடிந்துவிட்டது,” என்று பாகிஸ்தான் தற்காப்பு அமைச்சர் காவாஜா ஆசிஃப் தெரிவித்தார்.
அக்டோபர் மாதத்தில் தொடங்கிய அமைதி பேச்சு நவம்பர் 3ஆம் தேதி வரை 3 சுற்று நடைபெற்றது.
இரு நாடுகளின் எல்லை மோதலால் வட்டாரப் பாதுகாப்பு பாதிக்கப்படும் என்று அதிகாரிகள், பகுப்பாய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பாகிஸ்தானுக்குள் புகுந்து ‘டெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்’ என்ற ராணுவப் படையினர் தாக்குதலை நடத்தினர். இந்தக் கிளர்ச்சிப் படைக்கு தலிபான் அரசாங்கம் காபூலில் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டுகிறது.
இதையடுத்து துருக்கி, கத்தார் தலைமையில் இரு நாடுகளும் சண்டை நிறுத்தப் பேச்சுவார்த்தையை நடத்தின.
அண்மையில் ஆப்கானிஸ்தான் தரப்பினர் பாகிஸ்தான்மீது அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தினர். இதில் குறைந்தது 12 பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் இறந்தனர் என்று சொல்லப்படுகிறது. இதற்குப் பதிலடியாக ஆப்கானிஸ்தான் மாநிலங்களைக் குறி வைத்து பாகிஸ்தான் ஆகாயத் தாக்குதலை நடத்தியது. இரு நாடுகளும் வெளிப்படையாக மோதிக் கொண்டன.
முந்தைய சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த பிறகு பேசிய பாகிஸ்தான் அமைச்சர் ஆசிஃப், “தலிபான் ஆட்சியை முற்றிலும் அழித்து அவர்களை மீண்டும் குகைக்குள் தள்ள எங்களுடைய மொத்த ஆயுதங்களில் ஒரு பகுதியைக் கூட பயன்படுத்தத் தேவையிருக்காது என்பதை அவர்களுக்கு உறுதியாகக் கூறி கொள்கிறேன்,” என்று தனது எக்ஸ் பதிவில் எச்சரித்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அணுவாயுத வல்லமை உள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து எந்தவொரு தாக்குதல் நடத்தப்பட்டாலும்தக்க பதிலடிகளைத் தரும் என்றார் அவர்.
பாகிஸ்தானின் ராணுவ வலிமை அதன் அண்டை நாட்டின் ராணுவ வலிமையைவிட அதிகமாக உள்ளது. பாகிஸ்தானின் ஆயுதப் படைகள் சுமார் 650,000 வீரர்களைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலிபான் கட்டுப்பாட்டில் 405,000 வீரர்கள் உள்ளனர் என்று கூறப்படுகிறது.

