தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் ஒப்பந்தத்தைப் பெற்ற ஒப்பன்ஏஐ

2 mins read
c24e3115-4d4f-4ce7-a7a8-0f7d3b143082
அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் 200 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ஒப்பன்ஏஐ (OpenAI) நிறுவனம் பெற்றுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன் - அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் முன்னோடித் திட்டத்துக்கான 200 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ஒப்பன்ஏஐ (OpenAI) நிறுவனம் பெற்றுள்ளது.

நிர்வாக, பாதுகாப்பு வேலைகளுக்கு எவ்வாறு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்பதை முன்னோடித் திட்டம் ஆராயும்.

ஜூன் 16ஆம் தேதி தற்காப்பு அமைச்சு அந்த ஓராண்டு ஒப்பந்தத்தை அறிவித்தது. அதன் மூலம் சேட்ஜிபிடியை (ChatGPT) உருவாக்கிய ஒப்பன்ஏஐ நிறுவனம் அதன் தொழில்நுட்பத்தை அமெரிக்க அரசாங்கத்துக்கு விற்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அரசாங்கத்தின் ஒப்பன்ஏஐ என்ற புதிய நிறுவனத்தின் கீழ் பெறப்படும் முதல் திட்டம் என்று நிறுவனம் ஜூன் 16ஆம் தேதி அதன் வலைப்பதிவில் குறிப்பிட்டது.

ஒப்பன்ஏஐ நிறுவனம் தற்காப்பு அமைச்சுடன் இணைந்து அமெரிக்க ராணுவ உறுப்பினர்களுக்கு சுகாதாரப் பராமரிப்பைப் பெறுவது, இணையத் தாக்குதல்களைத் தடுப்பது போன்ற நிர்வாக வேலைகளில் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை ஆராயும்.

ஒப்பன்ஏஐ நிறுவனத்தின் தற்போதைய அரசாங்கத் திட்டங்கள் அனைத்தும் புதிய அரசாங்கத்துக்கான ஒப்பன்ஏஐ பிரிவின் கீழ் கொண்டுவரப்படும்.

அவற்றுள் சேட்ஜிபிடி கவ் என்ற திட்டமும் அடங்கும். அது அரசாங்க ஊழியர்களுக்காக மட்டும் உருவாக்கப்பட்ட ‌சேட்ஜிபிடி தொழில்நுட்பம். அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸா, தேசியச் சுகாதாரக் கழகங்கள், ஆகாயப்படையின் ஆய்வுக் கூடம், நிதியமைச்சு ஆகியவற்றில் உள்ள திட்டங்களும் புதிய பிரிவின் கீழ் கொண்டுவரப்படும்.

கடந்த ஆண்டு இறுதியில் ஆயுதங்களைத் தயாரிக்கும் அன்டுரில் நிறுவனத்துடன் இணைந்து ஆளில்லா வானூர்திகளுக்கு எதிரான கட்டமைப்புக்குரிய செயற்கை நுண்ணறிவை உருவாக்கவிருப்பதாக ஒப்பன்ஏஐ நிறுவனம் சொன்னது.

அண்மை மாதங்களில் ஜனநாயக நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளையும் உருவாக்க ஒப்பன்ஏஐ திட்டமிடுவதாகக் கூறியது.

ஒப்பன்ஏஐ நிறுவனம், அதன் தேசியப் பாதுகாப்புக் கொள்கை அணியை வழிநடத்த தற்காப்பு அமைச்சின் முன்னாள் உயர் அதிகாரியை நியமித்ததோடு தேசியப் பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் தலைவரையும் அதன் செயற்குழுவில் இணைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்