மணிலா: வெப்பமண்டலப் புயலான ‘ஃபெங்ஷென்’ கரையைக் கடப்பதற்கு முன்னதாக, பிலிப்பீன்சின் கரையோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்ததைத் தொடர்ந்து, பசிபிக் கடற்கரையோரம் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் சனிக்கிழமை (அக்டோபர் 18) தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
ஏறக்குறைய 270,000 பேர் வசிக்கும் ஏழ்மையான தீவான காடண்டுவானசில் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்பட்டது. சனிக்கிழமை பிற்பகுதியில் புயல் தாக்கக்கூடும் என்று அரசாங்க வானிலை சேவை தெரிவித்தது.
மற்றொரு நிலவரமாக, இந்தப் புயல் லுசோன் தீவில் ஞாயிற்றுக்கிழமை காலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஃபெங்ஷென் புயல், கனமழையுடன், 1 முதல் 2 மீட்டர் உயரத்துக்கு அலைகளைக் கரையோரமாக எழுப்பும். இதனால், கரையோரப் பகுதிகளில் குறைவானது முதல் மிதமான அபாயம் உள்ள வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று அரசாங்க வானிலை சேவை மையம் கூறியது.
கிழக்கு மாநிலமான ஆல்பெயிலில் கிட்டத்தட்ட 17,000 குடியிருப்பாளர்களும் அருகில் உள்ள காடண்டுவானஸ் தீவில் 9,000க்கும் மேற்பட்டோரும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக உள்ளூர் பேரிடர் அதிகாரிகள் தெரிவித்தனர்.