அணுவாயுதத் திட்டத்தைக் கைவிட திட்டமில்லை: ஈரான்

2 mins read
960a1a6f-d242-4f38-8b74-6a766413e635
ஈரான் வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி அணுவாயுதத் திட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று கூறினார். - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: ஈரானுக்கு அணுவாயுதத் திட்டத்தைக் கைவிட எந்தத் திட்டமும் இல்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி கூறியுள்ளார்.

அமெரிக்காவின் கடந்த மாதத் தாக்குதலில் பல்வேறு வசதிகள் கடுமையாகச் சேதமடைந்தபோதும் யுரேனியத்துக்குச் செரிவூட்டும் திட்டம் உள்பட அணுவாயுதத் திட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று ஈரான் சொன்னது.

“இப்போதைக்குக் கடுமையான சேதங்களால் செரிவூட்டும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது,” என்று திரு அராக்சி ஃபோக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

ஆனால் செரிவூட்டும் திட்டத்தை முழுமையாக நிறுத்திவிடமுடியாது என்ற அவர், “அது எங்கள் ஆராய்ச்சியாளர்களின் சாதனை. அது நாட்டின் பெருமை,” என்றார்.

எதிர்கால அணுவாயுத உடன்பாடுகளில் செரிவூட்டும் உரிமைக்கான அம்சம் இருக்கவேண்டும் என்று திரு அராக்சி வலியுறுத்தினார்.

தாக்குதலிருந்து செரிவூட்டப்பட்ட யுரேனியம் பாதுகாக்கப்பட்டதா என்ற கேள்விக்கு இப்போதைக்கு அதுகுறித்த விரிவான தகவல்கள் இல்லை என்றார்.

ஈரானின் அணு எரிசக்தி அமைப்பு அணுப் பொருள்களுக்கும் செரிவூட்டப்பட்ட பொருள்களுக்கும் என்ன ஆனது என்பதை மதிப்பீடு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜூன் 22ஆம் தேதி அமெரிக்கா ஈரானில் உள்ள மூன்று அணுவாயுத வசதிகள்மீது குண்டு வீசியது. அவற்றுள் டெஹ்ரானுக்குத் தெற்கில் நிலத்துக்கு அடியில் உள்ள யுரேனிய செரிவூட்டப்படும் தளமும் ஒன்று.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அந்தத் தாக்குதலை ஒரு வெற்றி என தொடர்ந்து கூறிவருகிறார். ஜூலை 19ஆம் தேதி மூன்று தளங்களும் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.

ஜெர்மனி, ஃபிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் அணுவாயுதத் திட்டம் குறித்து ஈரான் இஸ்தான்புல்லில் புதிய கலந்துரையாடலை நடத்தவிருக்கும் வேளையில் திரு அராக்சியின் கருத்து வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்